சென்னையில் இருக்கும் கொருக்குப்பேட்டை அண்ணாநகர் அன்பழகன் பகுதியை சார்ந்தவர் முத்து (30). இவர் அங்குள்ள சில்வர் பாத்திரம் தயாரிக்கும் தொழிற்பட்டறையில் பணியடி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கவிதா (26).
இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சுமார் 5 வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில்., மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு அழகான பெண்குழந்தை ஒன்று பிறந்தது.
5 வருடங்கள் தவமிருந்து பெற்ற குழந்தை என்பதால்., இருவரும் குழந்தையை மகிழ்ச்சியோடு., பாசத்தோடு வளர்ந்து வந்தனர். குழந்தையை மாதம் தோறும் பரிசோதனைக்கு அழைத்து சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில்., சுமார் 2 நாட்களுக்கு முன்னதாக குழந்தையை மருத்துவர்களிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்., குழந்தைக்கு பார்வை குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை பார்வை குறைபாட்டுடன் பிறந்திருப்பதை கேட்டு மன வேதனையில் நொந்து போனார்கள்., இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான முத்து., பணிக்கு செல்லாமல் இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருந்து வந்த நிலையில்., நேற்று இரவு மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெளியே சென்றிருந்த கவிதா., வீட்டிற்கு வந்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்து அலறினார். இதனை கேட்டு பதறியபடி விரைந்த அக்கம் பக்கத்தினர்., உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.