மகனின் திருமணத்தை 18,000 ரூபாய் செலவில் முடித்த தந்தை!

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகன் திருமணத்திற்கு ரூ.18,000 மட்டுமே செலவு செய்துள்ள சம்பவம் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

திருமணம் என்றாலே தற்போதைய காலத்தில் ஒரு ஆடம்பரமான நிகழ்ச்சி ஆகிவிட்டது. உறவினர்கள், ஊர்மக்கள், தெரிந்தவர்கள் எனப் பலருக்காகவும் விருப்பமில்லாவிட்டாலும், செலவு செய்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கலாச்சாரம் பெருகிவிட்டது.

அத்துடன் எளிமையாக திருமணம் செய்பவர்களை விமர்சனம் செய்யும் எண்ணங்களும் சமீப காலமாக பெருகிவிட்டன.

ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகன் திருமணத்தை சமீபத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகர்ப்புற வளர்ச்சித்துறையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி பட்நாலா பசந்த் குமார்.

இவர் தனது மகனின் திருமணத்தை வரும் பிப்ரவரி 10ஆம் திகதி நிச்சயித்துள்ளார். இந்தத் திருமணத்திற்காக மொத்தம் ரூ.18,000 மட்டுமே செலவு செய்துள்ளார்.

இந்தத் தொகையில் விருந்தினர்களின் உணவு ஏற்பாடும் அடங்கும். எளிமையுடன் நடைபெறவுள்ள இந்தத் திருமணத்தையொட்டி, புதுமணத் தம்பிகளை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் நரசிம்மன் வாழ்த்தவுள்ளார்.

ஏற்கனவே தனது மகள் திருமணத்தை பசந்த் குமார் எளிமையாக கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தியிருந்தார். அப்போது பசந்த், ஆளுநர் நரசிம்மனின் சிறப்பு இணைச் செயலாளராக இருந்தார்.

எளிமையாக நடந்த தனது மகள் திருமணத்திற்கு அவர், வெறும் ரூ.16,100 மட்டுமே செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.