புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் மகாலட்சுமி (30).
இவரும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால், திருமணத்திற்கு இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி திருமணத்திற்கான வேலைகள் தீவிரமா நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்த மோகன், அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு பின்புறம் அமைந்திருக்கும் தைலமரக்காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்துள்ளார்.
மகாலட்சுமி வீடு திரும்பாததால் அவரை அழைக்க காட்டுக்கு வீட்டார் சென்றுள்ளனர். அப்போது மகாலட்சுமி இறந்த நிலையிலும், மோகன் ரத்தக்காயங்களுடனும் கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து பதறிய வீட்டார்கள் மோகனை மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுபுறம் மகாலட்சுமியின் சடலத்தை கையில் தூக்கியவாறே கதறி அழுதுகொண்டிருந்துள்ளனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோகனிடம் விசாரணை மேற்கொள்கையில், மர்ம நபர்கள் சிலர் தாக்கிவிட்டு தப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால் முன்னுக்குப்பின் முரணாக மோகன் பேசியதால் சந்தேகமடைந்த பொலிஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், திருமணம் தொடர்பாக மகாலட்சுமிக்கும், மோகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று தைலமரக்கட்டில் பேசிக்கொண்டிருந்த போதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் உருட்டுக்கட்டையை எடுத்து மகாலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். தலை மற்றும் காதுப்பகுதியில் ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மோகனை கைது செய்துள்ளனர்.






