ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதாகமாக நுழையும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டியெழுப்ப அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
இதற்காக 5.7 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டிருந்த போதிலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை.
இதன் காரணமாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அமெரிக்காவில் அரசின் பாதிக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கிப்போயுள்ளன.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியுள்ள அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்காவுக்குள் வெளி நாட்டினர். சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர்.
இதனால், மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என்றார்.
இந்த நிலை தொடர்ந்தால் எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்.
அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், எல்லையில் சுவர் கட்ட ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.