தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மழை, புயல், வெயில், பனி என்று தொடர்ந்து வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக கடுமையான பனி பொழிவு இருந்து வருகிறது. மலை பகுதிகளில் மிக கடுமையான பனி பொழிவு இருந்து வருகிறது.
கொடைக்கானல் இதுவரை இல்லாத அளவிற்கு உறைபனி நிலைக்கு சென்றுள்ளது. இலைகள் மேல் உள்ள நீர் துளிகள் பனிக்கட்டியாக உறைந்து போனது. இன்னும் மைனஸ் டிகிரிக்கு கீழ் செல்லும் என்று அஞ்சப்படுகிறது.
வடகிழக்கு பருவக்காற்று கடந்துவிட்ட நிலையில் உயர் அழுத்த காற்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதனால் வட தமிழகத்தில் குளிர் வாட்டும். வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்நிலை தொடரும்.
சென்னையைப் பொருத்தவரை கடலிலிருந்து வெகு தூரத்திலிருந்த பகுதிகள் கடும் குளிரைச் சந்தித்தன. மேலும் வட தமிழகத்தில் இன்னும் சில கடும் குளிர் நீடிக்கும். சென்னையிலும் நேற்றிரவு பெரும்பாலான பகுதிகளில் குளிர் வாட்டியது.
நள்ளிரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் எலும்பை உருக்கும் அளவிற்கு குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மூடுபனியும், நீலகிரி உள்ளிட்ட மலை பாங்கான பகுதிகளில் உறைபனி இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 20 டிகிரி செல்ஸியஸ் நிலவவும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.






