கதறி அழுத குழந்தைகள்.. ஈவு இரக்கமின்றி ஆட்டுக்கொட்டகையில் அரங்கேற்றப்பட்ட கொடுமை!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வேடங்குப்பம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களை ஆடு மேய்ப்பதற்காக அழைத்து வந்து அடித்து சித்திரவதை செய்ததால், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள கிராமத்தில் தஞ்சமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வேடங்குப்பம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், அதே பகுதியில் விவசாயம் மற்றும் ஆடு மாடுகள் வைத்து வியபாரம் செய்து வருகிறார்.

இவரது ஆடுகளை மேய்ப்பதற்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ருத்தேஸ் என்பவரது பிள்ளைகளான ராதிகா (12), சக்திவேல் (6) மற் றும் வேலு (4) ஆகியோரை அழைத்துவந்து, தனது ஆடு மாடுகளை மேய்க்க வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தாய் தந்தையை பார்க்க வேண்டும் என, 4 வயது சிறுவன் அழுதுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நபர் சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்து, மீண்டும் ஆடுகளை மேய்க்க அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுவர்கள் அருகில் உள்ள மேல் புழுதியூர் கிராமத்திற்கு ஓடி வந்துள்ளனர். அங்கிருந்த சிலர், சிறுவர்களை மடக்கி பிடித்து விசாரித்து, செங்கம் காவல் துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் குழந்தைகளிடம் விசாரனை நடத்தினர். பின்னர் இதில் தொடர்புடைய நபரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.