ஆசிரியர்கள் மயங்கி விழுந்து, கவலைக்கிடம்!! குடும்பத்தினர் மருத்துவமனைக்கு ஓட்டம்!!

ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது தான் இயற்கை நீதியாகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

2009-ஆண்டு மே 31-ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன் மற்ற படிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதன்பிறகு, அதாவது 2009 ஜூன் ஒன்றாம் தேதி முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்ற அளவில் மிகவும் குறைவாகவே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2009 மே மாதத்தில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அனைத்து படிகளுடன் சேர்த்து ரூ.42,000 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதன்பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.26,500 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

9 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் போதிலும், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் அரசின் பாராமுகத்தைக் கண்டித்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாநிலை மேற்கொள்ளப்போவதாக பாதிக்கப் பட்ட ஆசிரியர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி 5வது நாளாக சென்னையில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் இன்று 166 பேர் மயங்கி விழுந்தனர். போராட்டத்தின் போது மயக்கமடைந்த அந்த 166 ஆசிரியர்களும் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.