வேலுார் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் வனத்தில் இருந்து ஒரு சிறுத்தை, வெளியேறி, கடந்த சில நாட்களாக, அங்குள்ள குடியிருப்புகளில் சுற்றித் திரிந்து வருகிறது.
ஆம்பூரை அடுத்து உள்ள அபிகிரி பட்டறையில் இருந்த இரண்டு ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக் குட்டியை, இந்த சிறுத்தை கடித்துக் குதறி உள்ளது.
இந்த நிலையில், சிக்கனாங்குப்பத்தைச் சேர்ந்த அலமேலு (வயது 38) என்பவர், வனப்பகுதியை ஒட்டிய தனது விவசாய நிலத்திற்குச் சென்றார். அப்போது, அருகில் இருந்த பனை மரத்தின் அருகில் பதுங்கி இருந்த அந்த சிறுத்தை அந்தப் பெண்ணின் மீது பாய்ந்து, அவரைக் கடித்துக் குதறியது.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அவரது அண்ணன் பாரதி மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சரவணன், கோவிந்தராஜ், பொன்ரத்தினம் ஆகியோர் விரைந்து வந்தனர்.
அவர்களைக் கண்ட சிறுத்தை, அவர்கள் மீதும் பாய்ந்து கடித்துக் குதறியது. இதை அடுத்து, அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்களையும் இந்த சிறுத்தை விரட்டியது. அதனால் பீதி அடைந்த மக்கள், நாலா பக்கமும் ஓட்டம் எடுத்தனர்.
பின், அந்த சிறுத்தை, அங்கிருந்த ஏரிப்பகுதி வழியாக ஓடி காட்டுக்குள் சென்று விட்டது. இந்த சிறுத்தையால் படுகாயம் அடைந்த ஆறு பேர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இதனை அடுத்து, வனத்துறையினர் அந்த சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.