பிரதமராக பதவியேற்றார் ரணில்! அதிரடி நடவடிக்கை ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமான செயல் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட உறுப்பினர்களின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியலமைப்பிற்கு அமைய கட்சியின் உறுப்பினர் வேறு அரசியல் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொள்ளும் போது, தங்கள் கட்சியில் பெற்றுக் கொண்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இரத்து செய்யப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் உடனடியாக இது தொடர்பில் நாடாளுமன்ற பொது செயலாளர் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் செயலாளர்கள் இருவரும் தங்கள் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல தயார் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று காலை பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், மஹிந்த உள்ளிட்ட குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.