போலீசாரின் கொடுமையால் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு, விதவை பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அருகில் உள்ள சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகசுந்தரம், பாலம்மாள் தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி பாலகுமார் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்த நிலையில், கடந்த 5 மாதத்துக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முகசுந்தரம் திடீரென்று உயிரிழந்தார். இதகைத்தொடர்ந்து பாலம்மாள், தன்னுடைய குழந்தை பாலகுமாரனுடன் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென்று தனது மகனின் கழுத்தில் சேலையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பாலம்மாள், அதே சேலையால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாலம்மாளின் வீட்டில் சோதனை நடத்திய போலீசாருக்கு அவர் கடைசியக எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், கணவர் இறந்த பின்னர் பாலம்மாளுக்கும் அவரது மாமியார் மகராசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கணவரின் ஆதார் அட்டையை மகராசி எடுத்து வைத்துக்கொண்டு கொடுக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதுமட்டுமின்றி பாலம்மாள் மீது மகராசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அந்த புகாரின்பேரில் பாலம்மாளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மிகவும் அவதூறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கணவரை பறிகொடுத்த நிலையில் தொடர்ந்து வேதனையை அனுபவித்து வந்த பாலம்மாள், தனது மகனை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியயுள்ளது.






