தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னணியில் சீனாவே இருக்க கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி – மகிந்தவுக்கு பின்னணியில் யாரும் இருப்பதாக எண்ணுகிறீர்களா? என அவரிடம் அந்த ஊடகம் கேள்வியெழுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,
தற்போது இலங்கையில் அரசியல் சூழல் மிகவும் பலவீனமாக உள்ளது. முழுமையான காலம் ஆட்சியை நடத்துவேன் என்று உறுதி கொடுத்த மைத்திரி ஆட்சியை கலைத்துள்ளார்.
மகிந்தவுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கலாம் என்று எண்ணுகிறோம். ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் ராஜபக்ச பெரும்பாலும் சீனாவை சார்ந்து இருந்தார்.
அண்டை நாடான இந்தியாவை விடுத்து, சீனாவிடம் நட்பு பாராட்டினார். தற்போது அவர் பிரதமராக பதவி ஏற்ற போது சீனா தூதரகம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.
அடுத்ததாக பாகிஸ்தான் வாழ்த்து கூறியது. இதில் இருந்து பார்க்கும்போது, சீனாவின் பின்னணிதான் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் என்று யூகிக்கிறோம்.
இதனிடையே, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் அது இந்தியாவுக்குத்தான் சிக்கலாக அமையும். இந்த பிரச்னையை இந்தியா கவனமாக கையாண்டிருக்க வேண்டும்.
இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்செய்யும் கடமைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. இலங்கையில் ஜனநாயக முறைமைகள் இல்லாமல் போகும்போது இந்தியா தனது ஆளுமை திறனைக்கொண்டு உதவியிருக்கவேண்டும்.
இந்நிலையில், இலங்கைக்கு உதவவேண்டியது இந்தியாவின் கடமை” என அவர் மேலும் கூறியுள்ளார்.