விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார். இதில் அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் அதிமுக அரசு இலவசமாக கொடுத்த, மிக்சி, டேபிள் பேன் போன்றவற்றை தீயில் வீசி அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் திமுக ஆட்சியிலும் தான் இலவச கலர் டீவி கொடுக்கப்பட்டது. இதில் அதிமுக கட்சி மீது மட்டுமே பாரபட்சம் காட்டப்படுவதாக கூறியுள்ளனர்.
மேலும் ஜெயலலிதாவின் இயற்பெயரை படத்தில் வில்லி கேரக்டரில் இடம்பெற செய்து, அவரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இது குறித்து பேட்டியளித்திருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ‘ சர்கார் பட விவகாரத்தை சட்டப்படி அணுகுவோம் என்று பேட்டியளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்’ இந்த படத்தை ஜெயலலிதா இருக்கும் போது எடுத்திருந்தால் மக்கள் விழிப்புணர்வுக்கு எடுக்கப்பட்ட படம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நேரத்தில் இப்படிபட்ட படம் எடுத்தால் தான் ஓடும் என்ற நுணுக்கம் தெரிந்து எடுக்கப்பட்ட வியாபர நோக்கம் கொண்ட படம் என்று கூறியுள்ளனர்.
நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் சர்கார் திரைப்படம் வெளியிடப்படும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி பேனர்களை கிழித்து வருகின்றனர். மதுரையில் மூன்று தியேட்டரில் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று மாலை 5 மணியளவில் சென்னை காசி தியேட்டர் முன்பு நூற்றுக்கணக்கான அ.தி.மு.க-வினர் குவியத்தொடங்கினர்.
உடனடியாக அங்கு வந்த விஜய் ரசிகர்கள் அ.தி.மு.க-வினர் பேனர்களை கிழிக்கும் முன்பு தாங்களாகவே அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீஸாரும் தியேட்டர் முன்பு குவிக்கப்பட்டியுள்ளனர்.
இந்நிலையில், சர்கார் பட விவகாரம் குறித்து, அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியவை, ஜெயலலிதா கொண்டு வந்த இலவச திட்டத்தை நடிகர் விஜய் கொச்சைப்படுத்தியுள்ளார். விலையில்லாமல் வழங்கப்படும் தரமான 20 கிலோ அரிசியை வழங்க வேண்டாம் என்று சொல்கிறார் நடிகர் விஜய். அப்படி வழங்குவது தவறு என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டு வீதிகளில் அவர் நடந்து விடுவாரா.
திரைப்படத்தில் வசனங்களாக பேசாமல் நிஜத்தில் இப்படியான கருத்துகளை அவர் தெரிவிக்க வேண்டும். அப்படி சொல்லிவிட்டு வீதியில் இறங்கி நடந்துவிடுவார் என்றால் நான் அவருக்கு அடிமையாக இருந்து வேலை பார்க்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறினார்.






