ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுகிறாரா? காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படம் தீபாவளியன்று வெளியானது. படத்தின் முதல் பார்வை தொடக்கி இன்று முதல் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

தீபாவளி அன்று வெளியான இந்த படத்திற்கு, விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயத்தில் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை தீயிட்டு கொளுத்துவது போலவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களில் இயற்பெயரை கதையில் வில்லிக்கு வைத்துள்ளதாகவும் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக கட்சியினர் போர்க்கொடி தூக்கவே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

மேலும், இந்த படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். நேற்று அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் வெளியான திரையரங்களுக்கு சென்று போராட்டம், கல்வீச்சு, பேனர் கிழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட துவங்கினர்.

படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யாவிடில் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். இதனை அடுத்து இந்த படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கம் செய்வதற்கு படக்குழுவும்., தமிழக திரையரங்குகள் சங்கத்தினரும் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு காவல் துறையினர் திடீரென சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்க்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் குழுமம் நிறுவனம் ”இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை காவல் துறையினர் கைது செய்ய போவதாக” தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

இந்து குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ”காவல் துறையினர் எனது இல்லத்திற்கு வந்தது உண்மை., நான் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தவே காவல் துறையினர் வந்தனர். என் மீது கைது நடவடிக்கை ஏதும் இல்லை” என்று விளக்கமளித்து இருந்தார்.

சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இட்ட பதிவுக்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ”இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்வதற்காக செல்லவில்லை என்றும், வழக்கமான ரோந்து பணிகளுக்காகவே சென்றதாகவும்” காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.