கருப்பண்ண சாமி கண் திறந்த அதிசயம்!

மேட்டுப்பாளையத்தில் கருப்பண்ண சாமி கண் திறந்து பார்த்ததாக செய்தி பரவியதால் அதனை காண கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே ஒன்னிப்பாளையம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருப்பண்ண சாமி கோவில் உள்ளது.  இந்த கோவிலில் இப்பகுதி கிராம மக்கள் சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் திருவிழா கொண்டாடபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இக்கோவிலில் புதியதாக சிவன் மற்றும் நந்தி சிலைகள் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கும்பாபிஷேகம் முடிந்து அடுத்த நாள் காலையில் மூலவரான கருப்பண்ண சாமி கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.நேற்று இரவும் பூஜை செய்த போது அதுமாதிரியான நிகழ்வு நடந்ததாக அதனை கண்ட கிராம மக்கள் சிலர் ஊருக்குள் சென்று கூறியுள்ளனர். பின்னர் இச்செய்தி காட்டு தீ போல் பரவியதை தொடர்ந்து இன்று அந்த கோவிலில் கருபண்ண சாமியை வழிபட கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஏராளமான பெண்கள் வந்து வழிபாடு நடத்தினர். இதுவரை ஊர் மக்கள் மட்டுமே வந்து வழிபட்ட இக்கோவிலில் இன்று கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கும் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.