தாகத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாதா? புலம்பும் கோஹ்லி

ஐ.சி.சி விதித்துள்ள புதிய விதிமுறைகளில் தண்ணீர் அருந்தும் இடைவேளை தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த செப்டம்பர் 30 முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. குறிப்பாக ஓவர்களுக்கான இடைவேளை அல்லது விக்கெட் விழும்போது, வீரர் ஒருவர் தாகம் எடுத்தால் நடுவரிடம் தான் கேட்க வேண்டும்.

அவர் தான் தண்ணீர் கொடுப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், இரு அணி வீரர்களும் தண்ணீருக்காக நடுவரின் அனுமதி வேண்டி காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,‘நாங்கள் எந்த சூழ்நிலையில் ஆடுகிறோம் என்பதை உணர்ந்து இந்த விதிகளை விதிக்க வேண்டும். இந்த மாற்றங்களால் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

40-45 நிமிடங்களுக்கு தண்ணீர் அருந்தாமல் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வது மிக கடினம். இந்த சூழ்நிலையில் நான்கு பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு பந்துவீசுவது சிரமம் என்பதால் நாங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கினோம்’ என தெரிவித்துள்ளார்.