அன்புள்ள விஜய்…
நேரில் ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில் “பார்த்ததை”த்தவிர நாம் சந்தித்ததில்லை. பிறகு எப்படி “அன்புள்ள..” என்று உங்களை அழைக்கமுடியும் என்று நினைக்கலாம்.
தங்களின் பல லட்சம் ரசிகர்கள் எப்படி தங்களைப் நேரில் பார்க்காமலேயே தங்கள் மீது அன்புகொண்டிருக்கிறார்களோ, அப்படித்தான் நானும்.
ஆம்.. உங்கள் இயல்பான, நகைச்சுவையான, அதிரடியான நடிப்பை ரசிப்பவர்களுள் நானும் ஒருவன். திரையில் உங்களைப் பார்க்கும்போதே, ஏதோ நம் வீட்டு மனிதர் என்கிற எண்ணம் எனக்கும் ஏற்படும்.
அந்த அளவுக்கு நான் ரசிக்கும் நடிகர்களில் நீங்களும் ஒருவர்.
சில படங்களில் தாங்கள் நடித்த கதாபாத்திரம், வசனம் பிடிக்காமல் இருந்தாலும் பெரும்பாலும் ரசிக்கவே வைத்திருக்கிறீர்கள்.
பெரும் இயக்குநரின் பிள்ளையாக இருந்த உங்களுக்கு முதல் சில படங்களில் வாய்ப்பு எளிதாக கிடைத்தது உண்மையே. ஆனால் அடுத்தடுத்த தங்களது வியக்கவைக்கும் முன்னேற்றத்துக்கு தங்களின் திட்டமிடலும், உழைப்புமே காரணம். அதை யாரும் மறுக்கமுடியாது.
இப்படி திரைக்கு வெளியிலும் உங்களை ரசிக்கும் ஒருவனது கடிதம்தான் இது.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவிற்கு ஆதரவு அளித்தீர்கள். அப்போது சுமார் 35 தொகுதிகளை தங்கள் மன்றத்திற்கு ஒதுக்குமாறு அ.தி.மு.க.வின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், உங்கள் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டதாகவு கூட தகவல் வெளியானது. ஆனால் ஒதுக்கப்படவில்லை.
அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றது. அப்போது தங்கள் தந்தை, “அ.தி.மு.க. வெற்றிக்கு அணிலாக விஜய் உதவி செய்தார்” என்று புளகாங்கிதப்பட்டார்.
அப்போதுதான் அடுத்த தயாரான உங்கள் படத்துக்கு, “தலைவா” என்று பெயர் வைத்தீர்கள். அதோடு “time to lead “ என்று உப தலைப்பு கொடுத்தீர்கள்.
அதன் பிறகு நீங்கள்பட்டபாடு, உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும்.
இது குறித்து அப்போதே ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. பலரும் பேசினார்கள்.
அது இதுதான்:
“time to lead “ என்ற உப தலைப்பால் (அப்போதைய) முதல்வர் ஜெயலலிதா ஆத்திரமடைந்துவிட்டார். தேர்தலில் தனக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்திற்காக விஜய் தன்னை தலைவராக உருவாக நினைப்பதா என்று ஜெயலிலதா விசனப்பட்டார்.
ஆகவே தலைவா படத்தை திரையிடுவதில் ஏகப்பட்ட பிரச்சினை.
விஜய் நடித்த ‘தலைவா’ படம் 9.8.2013 அன்று வெளியாக இருந்த நிலையில், “இது அரசியல் படம். படத்தை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம்” என்று மிரட்டல் வந்தது. ஆகவே படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கமுடியாது என்றது காவல்துறை.
படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல். தயாரிப்பாளர் உண்ணாவிரத போராட்டம் என்று அறிவிக்க… அதுவும் முடியாத நிலையில் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தார்.
இன்னொரு பக்கம். விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சி.யும் கோடநாடு சென்றார்கள். அங்குதான் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் கோடநாட்டுக்கு வெகு தொலைவு முன்பே சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சி.யும் திருப்பி அனுப்பப்பட்டார்கள்” என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவங்களை எல்லாம் கேள்விப்பட்ட ரசிகர்கள் அதை தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினர். ஆனால் ரசிகர்களை அமைதிகாக்க கேட்டுக்கொண்டீர்கள்.
பிறகு பல தரப்பு சமரச முயற்சிக்கு பிறகு, தலைவா படத்தின் உபட தலைப்பான time to lead என்பதற்கு பதிலாக வேறு வார்த்தைகள் பதியப்பட்டு படம் வெளியானது.
அந்த காலகட்டத்தில் நீங்கள் பட்ட அவமானம் உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்கது. அதையெல்லாம் விழுங்கிக்கொண்டு, “பிரச்சினையா… ஏதுமில்லையே” என்றதோடு, ஜெயலலிதாவை பாராட்டவும் செய்தீர்கள்.
இன்னொரு சம்பவம்.
உங்களது 39-வது பிறந்த நாளை நீங்கள் மற்க்கவே முடியாது. சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்டமாக பிறந்த நாள் கொண்டாட இருந்தீர்கள். தமிழகம் கடந்து ன்னிந்திய அளவில் ரசிகர்களை திரட்டி விழா நடத்த திட்டமிட்டிருந்தீர்கள். பிரம்மாண்டமான பந்தல். 3,900 பேருக்கு ஒரு கோடியில் நலத்திட்ட உதவி, 39,000 பேருக்கு பந்தல், விருந்து என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்திருந்தீர்கள்.
ஆனால் அந்த விழாவை நடத்த முடியாமல் போயிற்று. கல்லூரி நிர்வாகம் திடீரென பின்வாங்கியது.
இதற்கன காரணமும் ஜெயலலிதாதான் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.
ஒரு பிறந்தநாளைக்கூட விரும்பியபடி கொண்டாடமுடியாத நிலை.. எத்தனை கொடுமை!
இப்போது எதற்காக இந்த பழங்கதைகளை இப்போது குறிப்பிடுகிறேன் தெரியுமா?
சமீபத்தில் சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசிய நீங்கள் ஒரு குட்டிக்கதையும் சொன்னீர்கள். உங்கள் பேச்சையும் குட்டிக்கதையையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதே நேரத்தில் சிலர் விமர்சிக்கவும் செய்தார்கள்.
அப்படி விமர்சித்தவர்களில் ஒருவர் உங்களது திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் கருணாகரன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்தார். உடனே உங்களது ரசிகர்கள் பலர், கருணாகரனை ஆபாசமாகவும் அருவெறுப்பாகவும் விமர்சித்தார்கள். அவற்றைப் படிக்கும்போதே அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
ஒருகட்டத்தில் வெறுத்துப்போன கருணாகரன், “ரசிகர்களின் தரத்தைவைத்து அந்த நடிகரை முடிவு செய்யலாம்” என்று பதிவிட்டார்.
இன்னும் ஆத்திரமடைந்த தங்கள் ரசிகர்கள், கருணாகரனின் அலைபேசி எண்ணை வெளியிட்டு, “தகுந்த பாடம் புகட்டுங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தார்கள்.
தங்கள் ரசிகர்கள் ஆளாளுக்கு அந்த எண்ணைத் தொடர்புகொண்டு நடிகர் கருணாகரனை ஆபாசமாக பேசியிருக்கிறார்கள்.. கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
இதை கருணாகரனே அழாத குறையாகச் சொல்லியிருக்கிறார்.
யோசித்துப்பாருங்கள்… அறிமுகமில்லாத எண்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் அலைபேசி ஆபாசமாக, மிரட்டலாக பேசினால் ஒருவரது மனநிலை எப்படி இருக்கும்? அவரது குடும்பத்தார் மனநிலை எப்படி இருக்கும்?
பொறுக்க முடியாமல், காவல்துறையில் வாய்மொழியாக புகார் தெரிவித்திருக்கிறார் கருணாகரன். எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரத்தோடு புகார் கொடுங்கள் என்று காவல்துறையினர் சொல்ல, அதற்கு ஒப்புக்கொண்டு திரும்பியிருக்கிறார்.
படத்தலைப்பின் கீழ் உப தலைப்பு ஒன்று வைத்ததற்காக ஜெயலலிதாவிடம் எத்தனை அவமானப்பட்டீர்கள் நீங்களும், உங்கள் தந்தையும்?
அதையெல்லாம் பொருட்படுத்தாம் அதே ஜெயலலிதாவைப் புகழ்ந்தீர்கள். அதோடு, ஜெயலலிதாவுக்கு எதிராக பேச வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டீர்களே!
எல்லாவற்றையும்விட தலைவா படத்தின் ஆரம்ப பேஸ்டரும், பிறகு உப தலைப்பு மாற்றப்பட்ட போஸ்டரும் உங்கள் அவமான காலத்தின் சாட்சியாக எப்போதும் இருக்கிறதே..!
இதையெல்லாம்விடவா கருணாகரன் உங்களை அவமானப்படுத்திவிட்டார்.
நீங்கள் ஒரு பொது மனிதர். உங்களது பேச்சை பலரும் விமர்சித்ததைப் போலந கருணாகரனும் விமர்சித்திருக்கிறார். எதிர்மறையான விமர்சனத்தையும் ஏற்பதுதானே ஒரு ”தலைவா”வுக்கு அழகு?
இந்த நிலையில் நீங்கள் எனஅன செய்திருக்க வேண்டும்? உங்கள் ரசிகர்களை, கருணாகரனை தரம்தாழ்ந்து விமர்சிக்காதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். கருணாகரனையே நேரடியாக சந்தித்து பேசியிருந்தால் இன்னும் சிறப்பு.
ஆனால் உங்கள் ரசிகர்கள் கருணாகரனை தரம்தாழ்ந்து பேசுவதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கிறீர்கள்.
“என் ரசிகர்கள் ஆபசமாக அருவெறுப்பாக கருணாகரனை விமர்சிப்பது எனக்குத் தெரியாது” என்று நீங்கள் சொல்லமுடியாது.
ஏனென்றால் அவர் விமர்சிப்பது சமூகவலைதளமான ட்விட்டரில். அது குறித்த செய்தி மற்ற ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.
இனியேனும், உங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குங்கள். கருணாகரனை மட்டுமல்ல… எவரையும் தரம்தாழ்ந்து விமர்சிக்காதீர்கள் என்று கூறுங்கள்.
விமர்சனத்தை ஏற்கப்பழகுங்கள்.
“தலைவா”வுக்கு அதுதான் அழகு.
அன்புடன்..
உங்கள் ரசிகர்களில் ஒருவன்.







