இங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்: இரண்டு கைகளிலும் பவுலிங் செய்த வீடியோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.

இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10-ஆம் திகதி துவங்கவுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இதில் முதல் பயிற்சி ஆட்டம் கடந்த 5-ஆம் திகதி Sri Lanka XI அணியுடன் மோதியது. இதில் டாக்வெர்த் லிவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி அசத்தினார். குறிப்பாக இவர் ஒரே ஓவரில் வலது மற்றும் இடது கைகளில் மாற்றி பந்து வீசினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரின் பவுலிங் திறமையைக் கண்டு இங்கிலாந்து வீரர்கள் மிரண்டு போயினர். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடரில் இவர் இரண்டு கைகளிலும் பந்து வீசி அனைவரையும் மிரட்டியுள்ளார்.