வெள்ள அபாயத்தில் சிறிலங்கா நாடாளுமன்றம் – அவசரமாக அழைக்கப்பட்ட இராணுவம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள தியவன்ன ஓயாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தைச் சுற்றி மண்மூடைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் அதிகளவில் பாயும் வெள்ளத்தினால், தியவன்ன ஓயாவின் நீர் மட்டம் நேற்றுமுன்தினம் இரவு சடுதியாக அதிகரித்தது.

இதனால், தியவன்ன ஓயாவின் நடுவே அமைந்துள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்று அதிகாலை 3 மணியளவில், சிறிலங்கா இராணுவத்தின் 14 ஆவது டிவிசனைச் சேர்ந்த படையினர் அவசரமாக அழைக்கப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி மண்மூடைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.