திடீர் திருப்பம் கருணாஸ் மீதான முக்கிய வழக்கு தள்ளுபடி!

கடந்த ஞாயிறு அன்று (செப்டம்பர் 16) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோசத்துடன் பேசிய, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸ், காவல்துறையினரையும், தமிழக முதல்வரையும், மற்ற சமுதாயகளையும் இழிவாக பேசினார். இந்த கருத்துக்கு பல தரப்பு மக்களிடமும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, நேற்று முன் தினம் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 16ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக எம்.எல்.ஏ கருணாஸ் மீது ஐபிசி 153, 153(A)(1)(b)(c),307, 506(i),120(b), சிட்டி போலீஸ் ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து 3 தனிப்படை அமைத்து காவல்துறை கருணாஸை தேடி வந்த நிலையில், நேற்று சென்னையில் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து போது, ”நான் தலைமறைவானதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான் என்றார். இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்றும் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே செப்டம்பர் 16 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய, கருணாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம், வழக்கறிஞர் தாமோதரன் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், செல்வநாயகம் தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவரை கைது செய்ய அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கமிஷனர் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.

சபாநாயகர் அனுமதி கொடுத்ததும் கருணாஸ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில். சற்றுமுன் (23.09.2018 அதிகாலை) கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தன்னை கைது செய்தது குறித்து கருணாஸ் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பெட்டியில், ”சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என்று தெரியவில்லை. இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய என் மீது குற்றப்பிரிவு 307 கீழ் ஏன் வழக்கு பதிவு செய்தனர் ? என்றும் தெரியவில்லை.

ஆளும் அதிமுக அரசு கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் செயல்படுகிறது. என் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் 13-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில் கருணாஸ் மீது போடப்பட்ட குற்றப்பிரிவு 307 வழக்கான கொலை முயற்சி வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்ற வழக்குகளின்படி அவருக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.