புலனாய்வுத்துறை போராளிகளை மடக்கிப்பிடித்த கருணா!

பீஸ்மர்

29.02.2004. இரவு. கருணாவின் தொலைத்தொடர்பாளர், மட்டக்களப்பு புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த நீலனை தொடர்பு கொண்டு, “சந்திப்பொன்றிற்காக நாளை அம்மான் அழைக்கிறார்“ என்ற தகவலை வழங்கினார். புலிகளுடன் முரண்பட ஆரம்பித்த பின்னர், விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புகளை சேர்ந்த போராளிகளை இப்படி அடிக்கடி அழைத்து சந்திப்பதை கருணா வழக்கமாக வைத்திருந்தார். கடந்த பாகத்தில் இவ்வளவு தகவல்களையும் குறிப்பிட்டிருந்தோம்.

மறுநாள்- மார்ச் மாதம் முதலாம் திகதி கருணாவின் மீனகம் முகாமில் சந்திப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் தங்கியிருந்த புலனாய்வு பிரிவின் போராளிகளை கருணா அழைத்திருந்தார்.

கருணா ஏற்கனவேயும் சில தடவைகள் அழைத்து, புலனாய்வுப்பிரிவினர் சென்று சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அப்படி செல்வதற்கு முன்னர் பொட்டம்மானிடம் இரகசியமாக ஆலோசனை பெற்றுவிட்டுத்தான் செல்வார்கள். கருணா எதிர்பார்ப்பதைபோல நடந்து, வீணாண சிக்கல்களை தவிர்க்க வேண்டுமென பொட்டம்மானிடம் ஏற்கனவே பிரபாகரன் கூறியிருந்தார். கிழக்கில் தன்னைவிட வேறு யாரும் முடிவெடுப்பவர்களாக இருக்ககூடாதென கருணா நினைத்ததை, பிரபாகரன் புரிந்து கொண்டதும், பொட்டம்மானிடம் அப்படியான ஆலோசனை கூறியிருந்தார். இதனால், புலனாய்வு பிரிவு போராளிகளை சந்திப்பிற்காக கருணா அழைத்ததும், அந்த சந்திப்புக்களிற்கு பொட்டம்மான் சம்மதம் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதில் இன்னொரு விசயமும் உள்ளது. கருணா விவகாரம் எப்படி முடியுமென்பதை யாராலும் ஊகிக்க முடியாமல் இருந்தது. பேசித்தீர்க்கத்தான் புலிகள் முயற்சித்தனர். எப்பொழுதும் புலிகள் இரண்டாவது ஒப்சனையும் வைத்திருப்பது வழக்கம். பேசித்தீர்க்க முடியாவிட்டால், தமது பாணியில் விசயத்தை முடிக்கும் விதமான திட்டமாக இருக்கும். (கருணா விவகாரத்தில் புலிகள் வைத்திருந்த இரண்டாவது ஒப்சன்தான், ஆளை “தூக்குவது“).  இரண்டாவது ஒப்சன் பற்றிய எச்சரிக்கை கருணாவிற்கு ஏற்படக்கூடாது. மட்டக்களப்பிலிருந்து புலனாய்வுத்துறையினர், கருணாவுடன் ஏட்டிக்குபோட்டியாக நடந்து கொண்டால், அவர் எச்சரிக்கையாகிவிடுவார். அவரது கட்டளைக்கு கீழ்ப்படிபவர்களாக இருந்தால் கருணா எச்சரிக்கையடைய வாய்ப்பில்லை. இதுதான் பொட்டம்மான் போட்ட திட்டம்.

மார்ச் முதலாம் திகதி- கருணா அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு செல்லுங்கள் என்று பொட்டம்மானிடமிருந்து மட்டக்களப்பிற்கு தகவல் சென்றது!

மட்டக்களப்பில் இருந்த புலனாய்வு போராளிகள் கருணாவின் மீனகம் முகாமிற்கு மார்ச் முதலாம் திகதி சென்றனர்.

சில மோட்டார் சைக்கிள்களிலேயே புலனாய்வுத்துறை போராளிகள் சென்றிருந்தனர். அவர்கள் செல்லும்போது, முகாம் வாயிலில் இருந்த காவலரனின் குறுக்கே வீதித்தடை போடப்பட்டிருந்தது. அந்த வீதித்தடை சில மாதங்களாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறை போராளிகள் சென்றபோது, வீதித்தடை கீழே இறக்கப்பட்டு, யாரும் முகாமிற்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது. கருணாவின் நம்பிக்கைக்குரிய ஜிம்கெலி தாத்தாதான் அன்றையதினம் முகாம் வாயில் காவலில் நின்ற போராளிகளை வழிநடத்தினார். அவரது கட்டளைப்படிதான் வீதித்தடை போடப்பட்டு, புலனாய்வுத்துறை போராளிகள் மறிக்கப்பட்டிருந்தனர்.

உண்மையில், மீனகம் முகாமில் அன்று சந்திப்பு நடக்கவிருந்தது, காவலரணில் நின்ற சாதாரண போராளிகளிற்கு தெரியாது. “யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம். முகாமிற்கு ஏதாவது அலுவலாக யாரும் வந்தால், எனக்கு அறிவியுங்கள்“ என்று கட்டளையிட்டிருந்தார்.

புலனாய்வுத்துறை போராளிகள் மீனகம் முகாமின் வாயிலுக்கு சென்றதும், காவல் கடமையிலிருந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவலர்களிடமிருந்தே ஜிம்கெலி தாத்தாவிற்கு தகவல் சென்றது. “அவர்களை பரிசோதித்து விட்டு உள்ளே அனுப்புங்கள்“ என்ற கட்டளை அவரிடமிருந்து சென்றது. வழக்கமாக இப்படியான நடைமுறைகள் இருக்கவில்லை. திடீரென ஏன் சோதனையென புலனாய்வுத்துறை போராளிகள் குழப்பமடைந்தாலும், தமது திட்டம் வெளியில் கசிந்து, தமக்கு வைக்கப்பட்ட பொறியே, இந்த சந்திப்பு என்பதை அவர்கள் ஊகிக்கவில்லை.

அந்த சந்திப்பிற்கு சென்றவர்களில் நீலனிடம் மட்டுமே ஆயுதம் இருந்தது. தனது பிஸ்டலை சேர்ட்டிற்குள் கட்டியிருந்தார். காவலரணில் பிஸ்டலை பத்திரமாக வைத்திருப்பதாக கூறி, வாங்கி வைத்து கொண்டனர்.

புலனாய்வுத்துறை போராளிகள் சந்தேகப்படகூடாதென்பதில் கருணா அணியினர் கவனமாக இருந்தனர். மீனகம் முகாமிற்குள் சிறிய மண்டபம் ஒன்று இருக்கிறது. அங்குதான் உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த மண்டபத்திற்குள் போராளிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு வைத்துதான் துப்பாக்கி முனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்யும் அணியை வழிநடத்தியது யார் தெரியுமா?

அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார். சாதாரண ஆளாக அல்ல- உயர்மட்ட அரசியல் செல்வாக்குடன்!

அவர்- பிள்ளையான்!

சுமார் பன்னிரண்டு வரையான போராளிகள் அந்த சந்திப்பிற்கு சென்றிருந்தனர். அனைவருக்கும் உடனடியாக கைவிலங்கிடப்பட்டு, விசாரணைகள் ஆரம்பித்தன. நீலனிற்குத்தான் அனைத்து இரகசியங்களும் தெரியும். அவரை தனியறையொன்றிற்குள் விலங்கிட்டு அடைத்து வைத்திருந்தனர். கிழக்கு அரசியலில் முக்கிய புள்ளியொன்றுதான், புலனாய்வுத்துறை போராளிகளை கைது செய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிள்ளையான்தான் விசாரணைக்கும் பொறுப்பாக இருந்தார்!

மீனகம் முகாமில் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நீலன் போன்ற முக்கியமான சிலரை தவிர, மற்றவர்கள் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். முதற்கட்ட விசாரணையின் பின், அதில் நான்கைந்து பேர் கருணா அணியில் இணைந்து கொள்கிறோம் என கூறினார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எஞ்சியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். நீலனின் உடல் தோல் மெதுமெதுவாக உரிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். நீலன் விவகாரத்தை இந்த இடத்தில் விட்டுவிட்டு, அந்த சமயத்தில் கிழக்கில் என்ன நடந்ததென்பதை குறிப்பிடுகிறோம்.

மீனகம் முகாமிற்குள் புலனாய்வுத்துறை போராளிகள் கைதுசெய்யப்பட்ட விவகாரம் வெளியில் கசியாமல் கருணா பார்த்துக் கொண்டார். மீனகத்தில் இருந்த யாரும்- எந்த தளபதியாக இருந்தாலும்- தொலைத்தொடர்பு கருவிகள் பாவிக்க முடியாது என்ற உத்தரவு பறந்தது. அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளும் சேகரிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் வெளியில் கசியாமல் இருக்க வேண்டுமென கருணா நினைத்ததற்கு, கௌசல்யன் கல்யாணத்தில் இந்த ஒப்ரேசனிற்காக வன்னியிலிருந்து யாராவது வரலாம், அவர்களையும் கைது செய்வது நோக்கமாக இருந்திருக்கலாம். அல்லது கௌசல்யனை கைது செய்வது கூட நோக்கமாக இருந்திருக்கலாம். ஏனெனில், இரண்டுநாளில் திருமணம் என்பதால், வீட்டிலேயே தங்கியிருந்தார் கௌசல்யன்.

கருணா- பிள்ளையான்

மார்ச் 02ம் திகதி. மீனகம் கைதுகள் வெளியில் கசியக்கூடாதென்பதில் கருணா மிக கவனமாக இருந்தார். அதனால், அங்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 03ம் திகதி வரையும் தகவல் கசியக்கூடாதென கருணா நினைத்தது, மிகச்சரியாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், கருணாவின் திட்டம் நிறைவேறவில்லை.

ஏன் நிறைவேறவில்லை.

புலனாய்வுத்துறை போராளிகள் கைது செய்யப்பட்ட விசயம், மட்டக்களப்பில் யாருக்குமே தெரியக்கூடாதென கருணா நினைத்தார். அதற்காக நிறைய ஏற்பாடுகளும் செய்தார். ஆனால் அவரது ஏற்பாடுகளையும் மீறி, அந்த தகவல் வெளியில் கசிந்தது. அதுவும் மட்டக்களப்பில் அல்ல, வன்னியில் இருந்த ஒருவர், இந்த விசயங்களை தெரிந்து கொண்டார்.

அவர்- பொட்டம்மான்!

புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட விசயம், மீனகம் முகாமின் உள்பகுதியில் இருந்தவர்களிற்குத்தான் தெரியும். வெளியில் காவல் கடமையில் இருந்த சாதாரண போராளிகளிற்குகூட தெரியாது. கொஞ்சம் உயர்மட்டத்தில் இருந்தவர்களிற்கு அரசல்புரசலாக விசயம் தெரிந்திருந்தது. அவ்வளவுதான். நிலைமை இப்படியிருக்க, வன்னியிலிருந்த பொட்டம்மான் எப்படி விசயத்தை அறிந்து கொண்டார்?

கருணாவின் சந்திப்பு விசயங்களை பற்றி, பொட்டம்மானிடம் முன்னரே அறிவித்துவிட்டுத்தான் நீலன் செயற்பட்டார். கருணாவின் சந்திப்பிற்காக நீலன் தலைமையில் போராளிகள் சென்றது பொட்டம்மானிற்கு தெரியும். வழக்கமாக இப்படியான சந்திப்புக்களிற்கு சென்று வந்ததும், சந்திப்பு தொடர்பான விசயங்களை உடனே பொட்டம்மானிற்கு அறிவித்து விடுவார் நீலன். கருணா ஒப்ரேசன் மிகமிக முக்கிய ஒப்ரேசன் என்பதால், உடனடியாக விசயங்களை அறிவதில் பொட்டம்மானும் ஆர்வமாக இருந்தார்.

மார்ச் முதலாம் திகதி மதியத்திற்கு பின்னர் நீலனிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லையென்றதும், பொட்டம்மான் எச்சரிக்கையாகி விட்டார்.

மட்டக்களப்பில் நீலன் தலைமையில் புலனாய்வுத்துறை செயற்பாடுகள் இருந்தாலும், கொழும்பு நடவடிக்கைகளிற்காக இன்னொரு இரகசிய நெட்வேர்க்கும் இருந்தது. அது அதிகமாக மட்டக்களப்பு நகரத்தில்- இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இயங்கியது. நீலனும், போராளிகளும் ஏதோ சிக்கலில் மாட்டிவிட்டார்கள் போலுள்ளது, உடனடியாக செக் பண்ணவும் என்ற தகவல் அவர்களிற்கு பறந்தது.

அவர்கள் மட்டக்களப்பில் இருந்ததாலும், தாக்குதலணி போராளிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்காததாலும், உடனடியாக தகவலை பெற முடியாமல் போனது.

இதற்கு பின்னர்தான், ரமேஷூடன் தொடர்புகொண்டார் பொட்டம்மான். ரமேஷ் கிழக்கின் இரண்டாவது தளபதியென்றபோதும், நீலன் கைது செய்யப்படப்போவதை அவர் முன்னரே அறிந்திருக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட பின்னரும், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியும் நிலையிலும் இருக்கவில்லை. ரமேஷில் அவ்வளவாக நம்பிக்கையற்ற நிலையிலேயே கருணா இருந்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். நீலனும் போராளிகளும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தகவலை மட்டும்தான் ரமேஷால் அனுப்ப முடிந்தது. வேறெந்த தகவலும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. கருணாவின் நம்பிக்கைக்குரிய அணியால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலைபற்றி, விசேசமாக விசாரிப்பது ஆபத்தை தருமென ரமேஷ் அஞ்சியதால் பேசாமல் இருந்து விட்டார்.

இதற்கு பின்னர்தான், தனது இரகசிய சோஸை பொட்டம்மான் களமிறக்கினார். கருணாவின் புலனாய்வு அணியில் இருந்த மிக முக்கியமான இருவர் பொட்டம்மானின் ஆட்கள். அவர்கள் தனது ஆட்கள்தானென கருணா நம்பியிருந்தார். அவரது நம்பிக்கையை சிதைக்காத விதமாக செயற்படுமாறு புலிகள் அவர்களிற்கு கூறியிருந்தனர். நீலனும் போராளிகளும் மீனகத்திற்குள் சிறை வைக்கப்பட்டுள்ள விசயத்தை இவர்கள்தான் பொட்டம்மானிற்கு அறிவித்தனர்.

இந்த தகவல் போனது மார்ச் 02ம் திகதி பிற்பகலில்.

மறுநாள்- மார்ச் 03ம் திகதி- கொக்கட்டிச்சோலை சிவன் ஆலயத்தில் கௌசல்யனின் திருமண நிகழ்வில் தன்னை கடத்த நடக்கவிருந்த ஒப்ரேசன் பற்றிய முழுமையான தகவலையும் கருணா அறிந்திருப்பார் என்பதை பொட்டம்மான் ஊகித்து கொண்டார். கருணா விவகாரத்தை சிக்கலில்லாமல் முடிக்க புலிகள் போட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. இனி பகிரங்க மோதலைவிட வேறு வழிகளே கிடையாது என்பது பொட்டம்மானிற்கு புரிந்தது. அவசரகதியில் செய்ய வேண்டிய சில விசயங்கள் இருந்தன.

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறையின் சில இரகசிய அணிகளும் செயற்பட்டு கொண்டிருந்தன. அவர்களை எச்சரித்து, பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வைக்க வேண்டும். கருணாவுடன் இருந்த உண்மையான அர்ப்பணிப்புள்ள தளபதிகளையும், போராளிகளையும் பிரித்தெடுக்க வேண்டும். முக்கியமான இன்னொரு விசயம், கௌசல்யனை காப்பாற்ற வேண்டும்!

கௌசல்யனின் திருமண நிகழ்வு ஒருவகையில் கருணாவிற்கு பொறி வைக்கவே கொக்கட்டிச்சோலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்தால், கௌசல்யன் மீது கருணா கொலைவெறி கோபம் ஏற்படுமென்பது இயல்புதான். கௌசல்யனிற்கு ஆபத்து நேர முன்னர் காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் கணக்குப்பார்த்த பொட்டம்மான், துரிதமாக காரியத்தில் இறங்கினார்.

மார்ச் 02ம் திகதி மாலையில் கௌசல்யனிற்கு விசயம் அறிவிக்கப்பட்டது. “உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள், மறுநாள் எப்படியாவது மட்டக்களப்பிலிருந்து வெளியேறி வன்னிக்கு வந்துவிடுங்கள்“ என்ற தகவல் போனது. விசயத்தை யாரிடமும் சொல்லாமல் கௌசல்யன் அன்றிரவே பாதுகாப்பான மறைவிடமொன்றிற்கு சென்றுவிட்டார்.

கௌசல்யனின் நெருங்கிய உறவினர்களே விசயத்தை அறியாமல் மறுநாள் திருமணத்திற்கு வந்தார்கள். ஆலயத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, சமையல் வேலைகளும் ஆரம்பித்திருந்தன. கிட்டத்தட்ட- மணமக்களை தவிர மிகுதி அனைவரும் வந்து விட்டனர். சுபநேரம் நெருங்கியும் மணமக்கள் வரவில்லை. என்னஏதென அவர்கள் விசாரிக்க, “மட்டக்களப்பில் புலிகளிற்குள் ஏதோ குழப்பமாம். கௌசல்யன் வன்னிக்கு போய்க்கொண்டிருக்கிறாராம். கூடவே, மட்டக்களப்பு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் பிரபா போன்றவர்களும் செல்கிறார்களாம்“ என்ற தகவல் அரசல்புரலாக அடிபடத் தொடங்கியது.

கருணாவின் உடனடி குறியாக கௌசல்யன் இருப்பார் என்பதை ஊகித்தே, அவரை எச்சரித்தார் பொட்டம்மான். அவரது கணிப்பு சரியென்பதை பின்னர் காலம் உணர்த்தியது!

கௌசல்யனும், பிரபாவும் வன்னிக்கு தப்பிச்சென்றுவிட்டனர் என்ற தகவல் கருணாவை கடுமையாக கோபப்படுத்தியது. தமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் எதோ குறையிருக்கிறதென தனது தளபதிகளை கடுமையாக திட்டினார். தன்னுடன் இருக்கும் தளபதிகளிற்கு விசேட பாதுகாப்பு கொடுத்து, அவர்கள் தப்பிச்செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.

ரமேஷ் கிழக்கின் இரண்டாவது தளபதியாக இருந்தாலும், அவரில் கருணாவிற்கு சந்தேகம் இருந்ததென்பதை ஏற்கனவே குறிப்பிட்டு, அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுவதாகவும் சொல்லியிருந்தோம்.

தளபதி ரமேஷ்

தனது நம்பிக்கைக்குரிய அணியொன்றின் மூலம் ரமேஷை கண்காணிக்க தொடங்கினார். ரமேஷின் மெய்பாதுகாவலர்கள் என்ற பெயரில், அவரை சூழ்ந்து கொண்டனர். அன்று மாலையில் மட்டக்களப்பு முனைக்காடு மகாவித்தியாலத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, தமது நிலைப்பாட்டை மக்களிற்கு அறிவிக்குமாறு ரமேஷிற்கு உத்தரவிட்டார் கருணா. இது மார்ச் 03ம் திகதி நடந்தது.

தனக்கு பாதுகாப்பாக கருணா அனுப்பிய போராளிகளை அழைத்த ரமேஷ், “முனைக்காடு மகாவித்தியாலத்தில் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள். நான் கொஞ்சநேரம் கழித்து கூட்டத்திற்கு வருகிறேன்“ என அனுப்பிவைத்தார். ரமேஷ் சொன்னதை நம்பிய அவர்கள், பாடசாலைக்கு சென்று கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். இந்த இடைவெளிக்குள் ரமேஷ் மட்டக்களப்பை விட்டு வெளியேறினார். மாலையில் கூட்டத்திற்கு வந்தவர்கள், 4.30 மணி கடந்த பின்னர்தான், ஏதோ சிக்கலென்பது கருணா அணிக்கு புரிந்தது.

அவர்களிற்கு விசயம் புரிந்தபோது, ரமேஷ் மட்டக்களப்பு எல்லையை கடந்து வன்னியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.