26 வருடங்களுக்கு பின் இலங்கையில் சந்தித்துக்கொண்ட தாயும் மகளும்..

ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவர் 26 வருடங்களின் பின்னர், அவரின் சொந்த தாயை கண்டுபிடித்துள்ளார்.

26 வயதான ரியா ஸ்லோன் என்பவர் மூன்று வார குழந்தையாக இருந்த போது ஸ்கொட்லாந்து நாட்டு தம்பதியரினால் தத்தெடுக்கப்பட்டார்.

எனினும் 26 வருடங்களின் பின்னர் அவர் தனது சொந்த தாயை தேடி கண்டுபிடித்துள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் இரு பிள்ளைகள் தங்கள் தாயை கண்டுபிடிக்க இலங்கை வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கமைய அந்த இருவரில் ஒருவரான ரியா தனது தாயை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரியா தனது குழந்தை பருவத்தினை மகிழ்ச்சியாக அனுபவித்துள்ளார். இந்நிலையில் தனது பூர்வீக குடும்பம் தொடர்பான தகவல் அறிந்து அவர்களை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளார்.

சிறு வயதில் தனது குடும்பம் தொடர்பான தேடுதல் குறித்து ஒரு போதும் தான் சிந்தித்ததில்லை என ரியா குறிப்பிட்டுள்ளார்.

“இந்த இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கி இருப்பதை நான் சமீபத்தில் தான் உணர்ந்தேன், இரண்டு வேறுபட்ட அடையாளங்களைப் போல எனக்கு தோன்றியது.” என ரியா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிக்க வேண்டும் என விருப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனது தாய் உயிரோடு உள்ளாரா? என்னை பற்றிய நினைவுகள் உள்ளதா? என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே எனக்கு அதிகமாக இருந்தது.

அதற்கமைய ரியா தனது தாய் சுமித்ராவை கண்டுபிடித்தார். தனது தாய்க்கு ஏற்பட்ட வறுமை மற்றும் தனது காதலனை விட்டு பிரிந்து விட வேண்டிய நிலை ஏற்படும் என்பதன் காரணமாக தன்னை தத்துக் கொடுத்துள்ளார்.

தனது பிள்ளைக்கு உணவு வழங்குவதற்கு கூட வசதி இல்லாத நிலையில் அவரது தாய் காணப்பட்டுள்ளார். இதனால் அவர் குழந்தையை தத்துக் கொடுப்பதற்கு பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையின் லுலேமுல்ல, தொடங்கொட பிரதேசத்தில் வைத்தே அவர் தனது தாயை கண்டுபிடித்துள்ளார். தாயை மாத்திரம் அல்ல குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ரியா சந்தித்தார். தன்னையும் இன்னமும் குடும்பத்தினர் நினைவில் வைத்துள்ளனர். தனக்கு இது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எப்படியிருப்பினும் தான் வளர்ந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதனை உணர்ந்து மீண்டும் ஸ்கொட்லாந்துக்கு சென்றுள்ளார்.

எனினும் தற்போது தான் இரு நாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதனை போன்ற உணர்வில் இருந்து வெளியே வந்துள்ளதாக ரியா குறிப்பிட்டுள்ளார்.