விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், பேராசிரியர் தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மடவார் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர், ஆனந்தகுமார். இவரின் மகன் ஜெகதீஸ் (18), சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி, ஐ.டி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர், கல்லூரியிலிருந்து கடந்த சில நாள்களாக தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (30.3.18), பெற்றோர்கள் வெளியூருக்குச் சென்றுவிட்ட நிலையில், ஜெகதீஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு, பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவந்து பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி ஜெகதீஸ் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே, உறவினர்களின் உதவியுடன் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜெகதீஸின் தற்கொலையால் ஆத்திரமடைந்த அவரின் குடும்பத்தினர், அவரின் தற்கொலைக்குக் காரணம், அவர் படித்த கல்லூரியில் பணிபுரியும் ராமராஜ் என்ற பேராசிரியரே என்றும், அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாலேயே தங்களது மகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்றும், அதனால் அந்தப் பேராசிரியரைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார், மாணவனின் பொற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தான் தற்கொலை செய்து கொண்டதற்கு பேராசிரியர் ராமராஜ் தான் காரணம் என்றும், அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதைத் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாததால், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் இருந்தது. மேலும், தன் தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெகதீஸின் தற்கொலையால் அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் சோகத்த்தில் உள்ளனர்.