முடிவுக்கு வருகிறது கூட்டு அரசாங்கத்தின் ஆட்சி?

ஏபரல் 4ஆம் நாளுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கம் பதவியில் இருக்காது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.

“ஏப்ரல் 4ஆம் நாளுக்குப் பின்னரும், கூட்டு அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது தான் ஒரே வழியாகும்.

ஐதேகவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன 2020 வரை கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு ஒரே தடையாக இருப்பது ரணில் விக்கிரமசிங்க தான். எனவே அவர் பதவி விலக வேண்டும்.

யாரும் இன்னொரு தேர்தலை விரும்பவில்லை. அரசாங்கத்தை கவிழ்க்கவும் விரும்பவில்லை.

இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுவொருபுறமிருக்க, ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வாக்களிக்க கூடிய சூழ்நிலை தற்பொழுது உருவாகிவருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வாக்களிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பது போன்று பேசியிருந்தார்.

இந்நிலையில் மகிந்த அணியில் உள்ளவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் மாத்திரமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பவர்களுமே ரணிலுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.