“மனைவியின் ஆத்மா இப்போ சாந்தியடைந்திருக்கும்” தீர்ப்பைக் கேட்டு நெகிழ்ந்த கணவர்

தீர்ப்பைக்  கேட்டு நெகிழ்ந்த கணவர்!

கரூரில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், கொலை வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்பட்ட மூன்று பேர்களை விடுதலை செய்தும் கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

கரூர் மாவட்டம் குளித்தலை காவல் சரகத்துக்கு உட்பட்ட நச்சலூரை சேர்ந்தவர் ரெங்கன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்குப்  பூர்வீக சொத்து இருந்திருக்கிறது. அந்தச்  சொத்தை அபகரிக்க பல்வேறு வழிகளில் அதே பகுதியைச் சேர்ந்த ரஹ்மான், சிவக்குமார், நாகராஜ், உஷா மற்றும் போதும்பொண்ணு ஆகியோர் முயன்று வந்திருக்கின்றனர். இது விஷிமாக இரண்டு தரப்புக்கும் அடிக்கடி பிரச்னையும், கைகலப்பும் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில், அந்தச்  சொத்தை எப்படியும் அடைந்தே தீருவது என்ற நோக்கில், கடந்த 2016- ஜூலை 2 -ம் தேதியன்று, ரஹ்மான், சிவக்குமார், நாகராஜ், உஷா, போதும்பொண்ணு ஆகியோர் அருகில் உள்ள களத்துமேட்டுக்கு  மஞ்சுளாவை கடத்திச்  சென்று கையைக் கட்டி, தலையில் கல்லை தூக்கிபோட்டு கொடூரமாகக்  கொலை செய்துள்ளனர். பின்னர் மஞ்சுளாவின் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தலைமறைவாயினர்.

இது தொடர்பாக, குளித்தலைக்  காவல் துறையினர் வழக்குப்  பதிவு செய்தனர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரண்டு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று ரஹ்மான் மற்றும் சிவக்குமாருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும் , ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்தும் மற்ற மூவரையும் விடுதலை செய்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு குறித்து பேசிய மஞ்சுளாவின் கணவர் ரெங்கன், “எங்க சொத்தை அடைய என் மனைவியையே கொலை செய்த அத்தனை பேரையும் தூக்குல போட்டிருக்கவேண்டும். இருந்தாலும், ஆயுள் தண்டனை கொடுத்தது, என் மனைவி ஆத்மாவைச் சாந்தியடைய வச்சுருக்கும்” என்றார்.