உடல்நலக் குறைவால் அவதிப்படும் ஓ.பன்னீர்செல்வம்!

மதுரைக்கு வந்த துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் மருத்துவமனை ஒன்றில் அட்மிட் செய்யப்பட்ட அவருக்கு, சில பரிசோதனைகளுக்கு பின் நேற்று இரவு பெரியகுளத்துக்கு கிளம்பி சென்றார்.

உடல் நோவோடு

சமீபத்தில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் மகள் திருமணத்துக்கு வர முடியாத நிலையில், நேற்று இரவு மதுரையிலுள்ள அவர் வீட்டுக்கு வருகை தந்தார் ஓ.பன்னீர்செல்வம். மணமக்களை வாழ்த்திவிட்டு  ஊருக்கு கிளம்பிச் செல்லும்போது திடீரென்று அவருக்கு கையிலும், தோளிலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு பயங்கர வலி ஏற்படிருக்கிறது. இதை ஆரம்பத்தில்  கண்டுகொள்ளாமல் இருந்தவருக்கு தொடர்ந்து வலி அதிகரித்ததால், உடனே அவரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. சில பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்  ஊருக்கு கிளம்பி சென்றார்.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய கட்சியினர், ”துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த ஒரு வாரமாகவே உடல் நலமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். கடந்த வாரம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து மீட்பு பணியை பார்க்க சென்றவர், அன்றிரவு முழுவதும் தூங்காமலும், குளிரை தாங்க முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போதிருந்தே அவருக்கு உடல் நலம் கொஞ்சம் சரியில்லாமல் போனது. அதோடுதான் முதலமைச்சர் எடப்பாடியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட வந்தபோது ஒரு மாதிரியாக இருந்தார். பட்ஜெட் வாசிக்கும்போதும்  மிகவும் சிரமப்பட்டார். இந்த நிலையில்தான் மதுரைக்கு வந்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன்னாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார்” என்றனர்.