தரையில் கைகளை ஊன்றி சாப்பிடக்கூடாது ஏன்?

ஒருவர் சாப்பிடும் போது மேற்கொள்ளக்கூடாத சில பழக்கங்களும், மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடும் போது தண்ணீரை அதிகம் குடிக்கக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி குடித்தால், தாகத்திற்கு சிறிது குடிக்கலாம். அதிகம் குடித்தால் உணவை செரிக்க உதவும் அமிலத்தின் திறன் குறைந்து, உணவுகள் சரியாக செரிமானமாகாமல் போகும்.

வேண்டுமானால் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் மற்றும் உணவு உட்கொண்ட 30 நிமிடத்திற்கு பின் வேண்டிய அளவு தண்ணீரைக் குடிக்கலாம்.

உணவை உட்கொள்ளும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ, மொபைல் போன் அல்லது டிவி ரிமோட்டைப் பயன்படுத்திக் கொண்டோ சாப்பிடக்கூடாது.

இதனால் உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த முடியாமல் போவதோடு, அவைகளில் ஏராளமான கிருமிகளும் இருக்கும். இதனால் உடல் உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும்.

சாப்பிடும் போது புத்தகங்களைப் படித்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் எவ்வளவு உணவு உட்கொண்டோம் என்பது தெரியாமல் போவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடும். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

சாப்பிடும் போது நின்று கொண்டோ, தரையில் கைகளை ஊன்றி கொண்டோ அல்லது நடந்து கொண்டோ சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் தவறான நிலையில் அமர்ந்து உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இதனால் உண்ணும் உணவுகள் வேகமாக செரிமானமாகிவிடும். இதன் விளைவாக அதிகமாக சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

காலை உணவை எழுந்த ஒரு மணிநேரத்திற்குள்ளேயே சாப்பிட வேண்டும். ஒரு நாளில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது இரவு நேரத்திற்கும்-காலை நேரத்திற்கும் இடையிலான வேளையில் தான். அதேப் போல் இரவு நேரத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.