ரஜினிக்கு வயசாகிடுச்சு; கமல்ஹாசனுக்கு சகுனம் சரியில்லை..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எத்தனை கமல்ஹாசன்கள் வந்தாலும் அ.தி.மு.க-வை அழிக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், நாளை முதல் அவரது அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ளார். மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சிக்கொடி மற்றும் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். இந்தநிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் அரசியல் குறித்து விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, ‘அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆதரவுகோரும் கமலின் முடிவு கேலிக்கூத்தாக முடியுமே தவிர விஸ்வரூபமாக மாறாது.

கட்சி நடத்துபவர்களிடம் கமல்ஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் செய்துவருகிறார். ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால் கட்சித் தொடங்கும் கமலை வாழ்த்தியிருக்கலாம். வயதைக் கருத்தில் கொண்டு ரஜினி அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கட்சித் தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை. எத்தனை கமல்ஹாசன்கள் வந்தாலும் அ.தி.மு.க-வை அழிக்க முடியாது’ என்று தெரிவித்தார்.