யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மாவட்டங்களில் அடையாளம் காணப்படாத நோயினால் மரணங்கள் இடம்பெற்றிருப்பதாக பரவும் வாந்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பது விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அபாயகர நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாத காலமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் பதிவான மரணங்கள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அபாயகர நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் அனில் திசாநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, வடமாகாணத்தில் சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளுக்கு அமைவாக, இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட மரணங்கள் அனைத்தும் தெளிவான நோய் நிலைமை காரணமாக இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மரணங்கள் அனைத்தும் பல்வேறு நோய்கள் காரணமாக ஏற்பட்டமை வைத்திய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் ஒரு குடும்பத்திலோ அல்லது அவர்களது உறவினர்கள் மத்தியிலோ ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட மரணங்கள் அடையாளம் காணப்படாத நோயினால் இடம்பெற்றிருப்பதாக பரவும் வாந்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பது விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அபாயகர நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.






