வீட்டில் நேரத்தை ஒதுக்கிப் படியுங்கள்: துவாரகன்!

படிப்பிற்கென ஒவ்வொரு இடமும் ஏறி இறங்கி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் நேரத்தை வீட்டில் ஒதுக்கி படித்தால் நல்ல நிலைக்கு வரமுடியும் என தன் எதிர்கால சகோதரர்களுக்கு சொல்கிறார் ஸ்ரீதரன் துவாரகன்.

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று இன்று நாட்டு மக்களின் பேசுபொருளாக விளங்கிக்கிகொண்டிருக்கின்றார் துவாரகன். இவரது சாதனைப் பயணம் பற்றிய பார்வையினை இங்கே தருகிறோம்.

5a44e0e562adb-IBCTAMILயாழ்ப்பாணக் குடாநாடு ஏராளம் அறிஞர்களை உலகிற்குத் தந்த பூமியாகும். உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர் பரம்பலிலே வினைத்திறன் மிக்க ஆசிரியர்களையும் பொறியியலாளர்களையும் மருத்துவர்களையும் சட்டவாளர்களையும் நீதிமான்களையும் மட்டுமன்றி காத்திரமிக்க கலைஞர்களையும் புலவர்களையும் தந்த சான்றோர் வாழ்ந்த பூமியாக விளங்குகின்றது.

புலோலி…. குடா நாட்டில் உள்ள மிகப் பழமையான பாரம்பரியத்தையும் நீட்சிமிக்க சமய கலாசார மொழி மரபு விழுமியங்களையும் தனித்துவமாகக் கொண்ட ஓர் பழம்பெரும் நகரமாகும். வடமராட்சி நிலத்திணிவில் பருத்தித்துறை நகர சபைக்கு தெற்கே அமைந்துள்ள இது புலவர்களின் குரல் ஒலித்த இடமாக விளங்கியதால் புலோலி என அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். பச்சிமப் புலவர்கான நகரம் என இதற்கு மறுபெயருமுண்டு.

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பண்டிதர்கள், வித்துவ சிரோமணிகள், நாவலர்கள், புலவர்கள் அறிஞர்கள் போன்றோர் புலோலியில் பிறந்து பணியாற்றித் தத்தம் முத்திரையைப் பதித்து மறைந்தமைக்கான சான்றுகள் கூட உள்ளன.  இத்தகைய நீண்ட கல்விப் பாரம்பரிய மிக்க மண்ணிலே புத்தளை எனும் கிராமத்தைச் சேர்ந்த சிறிதரன்-அமுதா தம்பதிகளின் மூத்த மகனாகப் பிறந்தவரே துவாரகன்.

5a44e0e5391fb-IBCTAMILஅப்பா சிறிதரன், அம்மா அமுதா, தங்கை அபிநயா, பேரன் செல்லையா, பேத்தி சிவக்கொழுந்து என சிறிய குடும்பமாக துவாரகனின் குடும்பம் விளங்குகின்றது. வீட்டிலிருந்து ஈருருளியில் பாடசாலைக்குச் சென்றுவந்த துவாரகன் தான் படித்த காலத்தில் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையத்திற்கும் செல்வதையன்றி வேறு எந்த இடங்களுக்கும் அநாவசியமாக வீட்டிலிருந்து வெளிக்கிடுவதில்லை என்கிறார். வீட்டிலிருந்து மிகுதியாயுள்ள நேரங்களை படிப்பிற்கென ஒதுக்கியது தனது வெற்றிக்கான பலமிக்க அத்திவாரமாக இருந்ததாக அவர் கூறுகின்றார்.

அதிகமான புத்தகங்களைப் பெற்றோர் மூலமாகப் பெற்று கல்விக்கென உபயோகப்படுத்துவதும், கிடைக்கும் நேரங்கள் எல்லாம் சிக்கலான கணக்குகளையும் சமன்பாடுகளையும் செய்து பயிற்சி எடுப்பதும் மட்டுமல்லாது தேவையான பாடப்பரப்புகளை இணையம் மூலமாகத் தேடிக் கற்பதும் துவாரகனின் கல்வி முயற்சிகளாக விளங்கியிருக்கின்றன. தந்தையார் ஒரு கணினி வள முகாமையாளராக இருப்பதனால் துவாரகனின் கல்வி குறித்த இணையத் தேடுதல்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றது. தனது மகன் ஆரம்பத்திலிருந்து ஆங்கில மொழி மூலத்தில் கற்றதனால் அவர் இணையத்தில் தேடிக் கற்பதற்கு இலகுவாக இருந்ததாக துவாரகனின் தந்தை இராமநாதன் ஸ்ரீதரன் கூறுகிறார்.

மேலும், படிக்கின்ற காலத்தில் தாம் தமது பிள்ளையினைக் கட்டாயப்படுத்திப் படிப்பித்ததில்லை என்றும் அவராகவே உணர்ந்து படித்ததாகவும் அவர் கூறுகின்றார். கடந்த பல ஆண்டுகளாக மாலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியை யாருமே இயக்குவதில்லை என்றும் அவர் கூறுகின்றார்.

ஹாட்லி கல்லூரி 1838 ஆம் ஆண்டில் பிரித்தானிய மெதடிச மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது இலங்கையில் மிகப் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாக விளங்கியதோடு, வெசுலிய மதகுரு வண. மார்சல் ஹார்ட்லி என்பவரின் நினைவாக 1916 ஆம் ஆண்டில் ஹார்ட்லி கல்லூரி எனப் பெயர் பெற்றது.

பல கணித மேதைகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்கிவைத்த இங்கே இலங்கையின் பல பிரபலங்கள் கல்வி கற்றுள்ளனர். உதாரணமாக முன்னாள் சபாநாயகர் கே.பி.ரத்னாயக்கா இங்கே கல்வி கற்றார். 1989 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது.

இதேவேளை துவாரகனின் இந்த சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த அவரது வகுப்பு ஆசிரியரும் இரசாயனவியல் பாடத்தினைக் கற்பித்த ஆசிரியரும் தற்போதைய உப அதிபருமான குணசிங்கம் பிரதீபன் குறிப்பிடுகையில், “மிக நீண்ட காலத்தின்பின்னர் எமது கல்லூரிக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை இது. துவாரகன் சாதாரண தரத்தில் 8A 1C பெற்றவர். பின்னர் அவர் தனது ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் கற்றதால் இந்த வெற்றி கிடைத்தது. அவரது இந்த சாதனையைட்டு எமது பாடசாலை மிகுந்த பெருமையடைகிறது” என்றார்.

தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த பொறியியலாளராக வருவதே உயர்ந்த கனவு எனக் குறிப்பிடும் துவாரகன், கிடைக்கின்ற நேரத்தை வீணாகக் கழிக்காமல் படிப்பிற்காகவே ஒதுக்கி கற்குமாறு உயர்தர மாணவர்களுக்கு தனது பட்டறிவினைக் கூறுகின்றார்.

இலங்கையின் கல்வித் துறையில் கொடிகட்டிப் பறந்த யாழ்ப்பாணம் இடைவந்த யுத்த நிலைகளால் சீரழிந்துபோனதென்றுதான் சொல்லமுடியும். இருந்தாலும் அத்தனை வடுக்களின் மத்தியிலும் கல்வியினை சிறப்பாகவே மேற்கொண்டு சாதனை படைத்த மாணவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். துவாரகன் போன்ற மாணவர்களின் மீள் எழுச்சியானது நிச்சயம் வீழ்ந்துபோன யாழ்ப்பாணத்தின் கல்விப் புலத்தை மீண்டும் தலைதூக்கி முன்னரை விட மூச்சோடு நிமிர வைக்கும் என்பதில் ஐயமில்லை!