ஸ்ரீலங்காவின் தேயிலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரஷ்யா நீக்கியமைக்கு நன்றி தெரிவித்து பதுளையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்ற நிலையிலேயே மாகாண சபைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் வண்டுகள் கலந்திருந்ததாக தெரிவித்து ஸ்ரீலங்காவின் தேயிலை மற்றும் ஏனைய விவசாயப் பொருட்களுக்கான தடையை கடந்த 18 ஆம் திகதி ரஷ்யா திடீரென அமுல்படுத்தியிருந்தது.
ஸ்ரீலங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேயிலைப் பொதிகளில் கப்ரா என்ற வண்டு இனம் கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷ்யாவின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கூறியிருந்தது.
இந்த தடையை நீக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவினர் ரஷ்யா சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் தேயிலைக்கு விதித்திருந்த தடை நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து ஊவாமாகாண பெருந்தோட்ட தோட்ட தேயிலை உற்பத்தி தொழிலாளர்கள் இன்று ஊவாமாகாண சபைக்கு முன்பாக கவன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் ஊவாமாகாண முதலமைச்சர் சாமர சம்பத்தசாநாயக மற்றும் ஊவாமாகாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதேவேளை, ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகை மாற்றப்பட்டதற்கு எதிராகவும் ஊவா மாகாண முதலமைச்சருக்கும் ஊவாமாகாண ஆளுனர் எம்.பி ஜயசிங்கவிடமும் மனு கையளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.







