கிளிநொச்சி மாணவிகளுக்கு கருத்தடை ஊசி போடப்பட்டதா?

கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 10 வயதை தாண்டிய பெண் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் எச்.பி.வி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தடை ஊசி என மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் அதில் உண்மையில்லை. கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு ஊசியே போடப்படுகிறது யாரும் அஞ்சவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் 10 வீதமானவை கருப்பை கழுத்து புற்றுநோய்களே ஆகும். மேலும் மற்றைய புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் கருப்பை கழுத்து புற்றுநோய் அதிக தாக்கம் கொண்டதாகவும், மரணத்தை உண்டாக்க கூடியதாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய சுகாதார அமைச்சினால் கம்பகா, குருநாகல், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கருப்பை கழுத்து புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பு ஊசி போடப்படுகின்றது.

இது பாடசாலை மாணவிகளுக்கு குறிப்பாக 10 வயதை தாண்டிய பாடசாலை மாணவிகளுக்கு இந்த தடுப்பு ஊசி போடப்படுகின்றது.

இதனால் 70 வீதம் கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்தலாம். மேலும் 30 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு இந்த நோய் அதிகம் வருகிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் அதிகம் வருகிறது.

இதேபோல் இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 850 தொடக்கம் 950 பேருக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் வருகிறது. இதற்கமையவே கிளிநொச்சி மாவட்டத்தில் 10 வயதை தாண்டிய பாடசாலை மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய்க்கான தடுப்பு ஊசி போடப்படுகின்றது.

அதனை கருத்தடை ஊசி என தவறாக சிலர் கருதியதால் மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகின்றது. ஆனால் மக்கள் அதனை நம்ப வேண்டாம் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தங்கள் பிள்ளைகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு ஊசியை போட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

334