டெங்கு வை தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு பரவப் போகும் அடுத்த காய்ச்சல்

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துடன் மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்னும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் டெங்கு மற்றும் நுளம்பு காய்ச்சல்களை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்தவே இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 2 மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

விசேடமாக வெளி மாவட்டங்களில் இருந்து சுகாதார பணியாளர்கள் யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதே சமயம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் மலேரியா காய்ச்சலை பரப்பும் அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்ற நுளம்பு அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் முதலில் யாழ். புகையிரத நிலைய பகுதியில் இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நல்லூர் பகுதிகளிலும் இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் எவருக்கும் நோய் தாக்கம் உண்டானமை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் மழை காலம் ஆரம்பமாவதால் பொதுமக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்.

அதே சமயம் பொதுமக்களின் விழிப்புணர்வு இல்லாமல் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுளம்புகளை கட்டுப்படுத்த இயலாது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு நுளம்பை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Jaffna Welcomes You