தமிழகத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கலின் செல்லியாயிபாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35), லாரி டிரைவரான நடராஜனுக்கும் பபிதா (30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஹேமந்த் (9), ஜீவந்த் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர், நடராஜனுக்கு நைனாமலை அடிவாரத்தில் சொந்தமான வீடு உள்ளது.
காட்டுப்பகுதி என்பதால் பபிதாவுக்கு அங்கு வசிக்க பிடிக்கவில்லை, எனவே கடந்த மூன்று ஆண்டுகளாக பபிதாவின் அம்மா வீட்டுக்கு அருகே வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குடும்பம் வறுமையால் வாட நைனாமலைக்கே சென்று விடலாம் எனக்கூறி நடராஜன் வேலைக்கு சென்றுள்ளார்.
இதனால் நேற்று முன்தினம் குழந்தைகளுடன் பபிதா மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் பபிதா அறையை விட்டு வெளியே வரவில்லை, இதனால் சந்தேகமடைந்த உறவினர் கதவை தட்டிப் பார்த்தனர்.
கதவையும் திறக்காததால் உடைத்து உள்ளே சென்ற போது வாயில் நுரை தள்ளியபடி மூவரும் கிடந்தனர்.
உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பபிதா உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் உள்ள சிறுவர்கள் இருவருக்கும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புதுச்சத்திரம் பொலிசார் விசாரணை நடத்திவரும் நிலையில் பபிதா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
அதில், தனக்கு பிடிக்காத இடத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் லட்சியத்தை நிறைவேற்ற முடியவில்லை என எழுதியுள்ளார்.
மேலும் காட்டுப்பகுதியில் வசிக்க விருப்பம் இல்லாததால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.







