ஒத்தையா நின்னு புலியுடன் போரிட்ட தமிழனின் வீரத்தை பறைசாற்றும் “புலிக்குத்திப் பட்டாங்கல்”

சமீப காலமாக அடிக்கடி செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சியிலும் காணும் ஒரு திகிலான செய்தி, “திடீரென்று நகரத்திற்குள் புலி வந்து விட்டது, கிராமங்களில் இருந்த கால்நடைகளை வேட்டையாடும் புலி! பீதியில் மக்கள்…..! என்று நாடெங்கிலும் உள்ள பகுதிகளில் அவ்வப்போது இந்த மாதிரியான செய்திகள் வருவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

large_pulikuthipattangal-455இதனைத் தொடர்ந்து, மேற் கொள்ளப் படும் நடவடிக்கையின் எதிரொலியாக, வனத்துறையினர் நாய் ஒன்றைக் கூண்டில் கட்டி வைத்து, அதை வேட்டையாட வரும் புலியைக் கூண்டுக்குள் பிடித்து, அதைப் பத்திரமாக ஒரு வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டு விட்டு வருவார்கள்.

இதைச் செய்தியாக நாம் படிக்கும் போதோ, தொலைக்காட்சியில் பார்க்கும் போது, நமது பொழுதிற்குப் பாதகமில்லாமல் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கும். ஊருக்குள் ஒரு புலியோ, சிறுத்தையோ வந்து விட்டால் அதை விரட்டுவது, இந்த விஞ்ஞான யுகத்தில் கூட சவாலான காரியம் தான்.

வனத்துறையினரும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான், எந்நேரமும் விழிப்புணர்வுடன் அதன் போக்கினை, அதன் கால் தடங்களை வைத்தோ, கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி வரும் காட்சிகளை வைத்தும் நோட்டம் இட்டுக் கொண்டேயிருப்பார்கள். அதைப் பிடித்துக் காட்டுக்குள் விட்ட பிறகு தான், “அப்பாடா” என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்.

இப்போதே இந்த சூழ்நிலை என்றால், வாகன வசதி, துப்பாக்கி போன்ற ஆயுத வசதிகள் ஏதுமற்ற காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலை என்ன? இந்த மாதிரி ஒரு புலி வந்து விட்டால் என்ன செய்வது என்று துவங்கும் கேள்விகளுக்கு, மனிதனுக்கும் அந்த மிருகத்திற்கம் நடக்கும் போர் ஒன்று தான் அந்நாளில் விடையாக இருந்தது.

மனித இனம் தோன்றிய பின்பு, அவன் விலங்குகளை வேட்டையாடித் தான் தன் பசியையும், தன்னைச் சார்ந்திருந்தவர்களின் பசியையும் போக்க வேண்டியிருந்தது. பின்னர் விவசாயம் செய்து உண்ணும் முறைக்காக உணவுப் பதார்த்தங்களைப் பயிர் செய்யும் முறையைக் கண்ட பின் தான் மனிதனுக்கு, ஒரு மாற்று ஏற்பாடு கிடைத்தது.

காட்டை அழித்து நாடு, நகரங்களை மனிதன் உருவாக்கிய போது, தன் உணவிற்காக சில முறை காட்டில், தன் வேட்டையாடலில் தோல்வி ஏற்பட்டு பசி மிகுந்த சமயங்களில் அந்தப் புலி ஊருக்குள் வந்து மனிதர்கள் வளர்த்து வரும் கால்நடைகளைத் தாக்கி உண்டு பசியாறியது.

ஏளிமையாகக் கிடைக்கும் இரை, அதன் ருசி, அதற்காகச் செலவிடப்படும் நேரம் மிச்சம் போன்ற காரணங்களுக்காக அந்தப் புலி அடிக்கடி ஊருக்குள் வருகிறது.

சங்க காலத்திலும், அதன் பின்னரும் இது போல் ஊருக்குள் வரும் புலியை, உடல் வலுவுள்ள மனிதன் ஒத்தைக்கு ஒத்தையாக புலியுடன் போராடி இருக்கிறான். அப்போது, அவன் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தைக் கொண்டோ, அல்லது வெறும் கைகளுடனோ புலியுடன் புரண்டு சண்டை போட்டு, இறுதியில் அந்தப் புலியை மிகுந்த சிரமப்பட்டே கொன்றிருக்கிறான்.

இவ்வாறு புலியுடன் ஏற்படும் சண்டையில் அவனுக்கு பலத்த காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் அவன் உயிருக்கே ஆபத்து வந்து, புலி இறந்த பிறகு, அவனும் மாய்ந்து போக வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியிருந்தன.

அம்மாதிரி ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் புலியைக் கொன்றவனுக்காக, சங்க காலம் தொட்டேடு நடுகல் எழுப்பி, ஊருக்குள் வைத்துப் போற்றி, வழிபாடு செய்திருக்கிறார்கள். அவ்வாறு செய்யப்படும் நடுகல்லில் புலியுடன் அந்த வீரன் சண்டையிடுவது போல் கல்லில் செதுக்கிய சிற்பமாக்கி விடுவார்கள்.

அந்த சிற்பத்தின் தன்மையைக் கொண்டு, அந்த நடுகல் எந்த நூற்றாண்டில் செய்யப் பட்டது என்பதனை ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள். இம்மாதிரியான நடுகல்லுக்கு “புலிக்குத்திப் பட்டாங்கல்” என்று பெயர்.

படத்தில் காணப்படும் புலிக்குத்திப் பட்டாங்கல் என்ற நடுகல் பழநிக்கு வடக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானூர் என்ற ஊருக்குள் இன்றும் இருக்கிறது. அப் பகுதியில் வாழும் மக்கள் இதற்கு வழிபாடு செய்து பூஜைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் தற்போது வசிக்கும் கிராம மக்கள், இன்றும் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் போது, இந்த நடுகல்லை வணங்கி விட்டுத் தான் செல்கின்றனர்.

தங்கள் கால் நடைகளுக்கு, வன விலங்குகளால் எந்த வித பாதிப்பும் வராமல் இருக்க அந்தப் புலியைக் கொன்ற வீரன் தங்களுக்கு காவல் தெய்வமாக இருப்பான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இம்மாதிரியான நம்பிக்கைகளால் தான் நமது வரலாறும், கலாச்சாரமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.