தமிழக பாஜகவில் மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த ஜெமீலா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “நான் கடந்த 2 ஆண்டுகளாக
பாஜகவில் இணைந்து, மாநில மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராகக் களப்பணி செய்து வந்தேன் .பாஜக கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகக் கட்சியின் செயல்பாடுகளில் எனக்கு பல்வேறு கருத்து வேறுடுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தமிழக பா.ஜ.க-வின் கொள்கைகள் எழுத்தளவிலும் செயலளவிலும் மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உள்ளது.
என்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன். எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.






