வடக்கு சைபரஸ் ஊடாக இலங்கையர்களை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது

kappalவடக்கு சைபரஸ் ஊடாக இலங்கையர்களை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ள இலங்கையர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கப்பலில் 20 பேர் வரையிலான இலங்கையர்கள் இருப்பதாகவும், அவர்கள் புகலிட கோரிக்கையாளர்களா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஜிபுட்டியிலிருந்து லிபியா நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த ‘சீ ஸ்டார்” என்ற கப்பலே சைப்ரஸில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ஜிபுட்டியிலிருந்து இலங்கையர்கள் குறித்த கப்பலில் ஏறியுள்ளதாகவும், அங்கிருந்து எகிப்துக்கு பயணித்து, அதன் பின்னர் அங்கிருந்து விமானம் ஊடாக இலங்கை வர திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அந்த கப்பலில் உள்ள இலங்கையர்களில் ஐந்து பேர் சைபரஸில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோரியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 16 ஆயிரம் யூரோக்களை வழங்கி இத்தாலிக்கு செல்ல முயற்சித்ததாக குறித்த இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.