அரசியல் பிரவேசம் குறித்து பிறந்த நாளில் ரசிகர்கள் முன்பு அறிவிக்கும் கமல்?

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் ரசிகர்களை கூட்டி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று விமர்சித்தது, ஆட்சியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு கமல்ஹாசனும் டுவிட்டரில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் கமல்ஹாசனை அரசியல் களத்துக்குள் தள்ளுவதாகவும் அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் ஆலோசிக்க தொடங்கி இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது கமல்ஹாசன் மறுக்கவில்லை. விரைவில் உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று பதில் சொல்லி விட்டு சென்றார்.

எனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசப்படுகிறது. ரசிகர்களும் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் சந்திக்க தயார் என்று அமைச்சர்களும் சவால் விடுத்து வருகிறார்கள். அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை எப்போது அறிவிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

தற்போது தனியார் டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்கள் வரை நீடிக்க இருக்கிறது.

இதன் படப்பிடிப்பில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் பங்கேற்று வருகிறார். இதனால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை தள்ளி வைத்து இருக்கிறார்.

விஸ்வரூபம்-2 பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை ஓரிரு மாதங்களில் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார்.

அதன்பிறகு ரசிகர்களை திரட்டி தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.

வருடம் தோறும் தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதை கமல்ஹாசன் வழக்கமாக வைத்து இருக்கிறார். வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதியும் தனது பிறந்தநாளில் ரசிகர்களை அவர் சந்திக்கிறார்.

சென்னையில் இந்த கூட்டம் நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் பரபரப்பான அரசியல் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கமல்ஹாசன் நற்பணி இயக்கம் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை ஏழைகளுக்கு ரூ.40 கோடிக்கு மேல் நலத்திட்ட பணிகள் வழங்கப்பட்டு உள்ளன.

ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சிகள் அளித்தல் போன்றவைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

வருகிற நவம்பர் 7-ந் தேதியன்று பிறந்தநாளிலும் கமல்ஹாசன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் திரள்கிறார்கள். அப்போது முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்” என்றார்.

அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.