சசிகலாவிற்கு சகல வசதிகளும் இருந்தது உண்மைதான்!- சிறை அதிகாரிகள் ஒப்புதல்

s8

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் சகல வசதிகளுடன் ராஜபோகமாக இருந்து வந்துள்ளார். அத்தனை வசதிகளும் செய்து கொடுத்தது உண்மைதான் என்று சிறை அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

டிஐஜி ரேவண்ணா, ஏடிஜிபி மேகரிக் ஆகியோர் கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழு முன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் சசிகலா கும்பலிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாக டிஐஜி ரூபா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து ரூபாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோ மற்றும் நிழல்படங்களும் வெளியாகின.

போயஸ்கார்டனில் இருந்து போல இல்லாவிட்டாலும் சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

எல்லாம் பணம் படுத்திய பாடுதான். படுக்க பஞ்சு மெத்தை, சமைக்க தனி சமையலறை, யோகா செய்ய அறை, பார்வையாளர்களை சந்திக்க அறை என 5 அறைகள் சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டிருந்தன.

டிஜிபி சத்தியநாராயண ராவ் சசிகலா கும்பலிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாக டிஐஜி ரூபா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

சசிகலாவின் ராஜ போக வாழ்க்கை பற்றி அவர் புட்டு புட்டு வைத்திருந்தார். இவை ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சசிகலாவிற்கு சலுகை தரப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து ஒட்டு மொத்தமாக அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். டிஐஜி ரூபாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பெங்களூரு சிறையிலும் சின்னம்மாவின் அதிகாரத்தை பாரீர் என்று அதிமுகவினர் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

கர்நாடகா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.

அப்போது, சசிகலாவுக்காக கர்நாடகா சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சமாக கொடுத்ததாக மல்லிகார்ஜூனா தம்மிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

சசிகலாவிற்கு சிறையில் செய்யப்பட்டிருந்த வசதிகள், சிறையில் நடந்த விதிமீறல் பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான உயர்மட்டக்குழு விசாரணை நடத்தியுள்ளது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

சசிகலாவுக்கு சிறையில் சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று டிஜிபி ரேவண்ணா, ஏடிஜிபி மேகரிக் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சசிகலா அறையில் டிவி, சமையல் பாத்திரங்கள் இருந்தது உண்மைதான் என்றும் அவர்கள் கூறியுள்ளது சசிகலாவிற்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.