புற்றுநோய் மருத்துவ மனை அமைக்க பிரபாகரன் பத்து இலட்சம் வழங்குவதற்கு இணங்கினார்!

யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகள் கொண்ட புற்றுநோய் மருத்துவ மனையாக மாற்றியமைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புதல் வழங்கினார்கள்.

மேலும் வே.பிரபாகரன் 10 லட்சம் ரூபாய் நிதியையும் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார் என்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 3 வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் இன்றையதினம் மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,2003ம் ஆண்டு காலப்பகுதியில் ஐ.நா அகதிகளுக்கான ஸ்தாபனத்தின் யாழ்.பணிப்பாளராக இருந்த திருமதி மொறிஸ் மொஹான் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் யாழ்ப்பாணத்தில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலையை உருவாக்க இணக்கம் தெரிவித்தார்.

அந்த வைத்தியசாலை அதி நவீன வசதிகளுடன் ஒரு நோயாளியின் குடும்பமே தங்கியிருந்து வைத்தியம் பெறும் வகையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டது.

அதற்காக தமிழீழ விடுதலை புலிகள் வல்வெட்டித்துறையில்அமைத்திருந்த நிலக்கீழ் மருத்துவ மனையை புற்றுநோய் மருத்துவ மனையாக மாற்றும் யோசனையை நாங்கள் முன்மொழிந்தோம்.

அப்போது அப்போதிருந்த அமெரிக்க தூதுவர் அல்சி பில்ஸ் அந்த மருத்துவனை புலிகளின் மருத்துவமனை என்பதால் அதற்கு புலிகள் பகிரங்கமாக ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் எனவும் புலிகள் ஒருதொகை நிதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

அதற்கமைய நாம் தலைவர் மேதகு வே.பிரபாகரனுடன் பேசியிருந்தோம். அப்போது புலிகள் சார்பில் 1 லட்சம் ரூபாய் கேட்டோம். அவர் ஒரு லட்சம் எப்படி வழங்குவது அழகல்ல எனவும் அதற்காக 1 கோடி வழங்க தன்னிடம் பணம் இல்லை எனவும் கூறி, 10 லட்சம் ரூபாய் பணத்தை தருவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

அத்துடன், அதனை சிவில் உடையில் வந்து தருவதற்கும் இணங்கினார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் அது தொடர்பாக பேசப்பட்ட போது இங்குள்ள தமிழ் தலைவர்கள் அதனை குழப்பினார்கள்.

அப்போது வல்வெட்டித்துறையில் கட்ட விரும்பாவிட்டால் யாழ்ப்பாணத்தில் வேறு பகுதியிலாவது கட்டுங்கள் என நான் கேட்டேன்.

அதனையும் அவர்கள் மறுத்தார்கள். இப்போது ஒரு முறையான மருத்துவ வசதிகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை இல்லாமல் எமது மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என கூறினார்.

வடக்கில் படித்த மருத்துவர்கள் தங்கள் மாவட்டத்தில் சேவையாற்ற வேண்டும்

வடமாகாண மருத்துவர்கள் தாங்கள் படித்த மாவட்டத்திற்கு கட்டாயம் 2 வருடங்களாவது சேவையாற்ற வேண்டும். அவ்வாறான நடைமுறை ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுங்கள் என கேட்டிருக்கும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒன்றல்ல, 10 உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 3 வருட செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யும் விசேட அமர் வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது சிவாஜிலிங்கம் மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் மேற்கண்டவாறு கேட்டிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களில் மருத்துவர்களே இல்லாத நிலை காணப்படுகின்றது.

தென்னிலங்கையில் இருந்து வரும் மருத்துவர்களே மேற்படி இடங்கள் பலவற்றில் பணியாற்றுகின்றார்கள்.

குறிப்பாக கிளிநொச்சி, வேராவில் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் அவருடைய மனைவியும் பணியாற்றுகிறார்கள்.

மனைவிக்கு அங்கேவே பிரசவம் நடந்துள்ளது. இவ்வாறு எங்கள் மருத்துவர்கள் பணியாற்ற தவறுகின்றமை எதற்காக?

வடமாகாணத்தில் மட்டும் 34 வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

மேலும் ஆ சிரியர்கள் கட்டாயமாக 5 வருடங்கள் கஸ்ட பிரதேசங்களில் கடமையாற்ற வேண்டும் என நடைமுறை உள்ள நிலையில் மருத்துவர்களுக்கு அவ்வாறு நடைமுறை இல்லாமை எதற்காக?

அவர்கள் மக்கள் வரி பணத்தில் படித்தவர்கள் அவர்கள் அந்த மக்களுக்குப் பணியாற்ற வேண்டும்.

ஆகக்குறைந்தது 2 வருடங்களாவது கடமையாற்றிய பின்னர் அவர்கள் வசதி படைத்த இடங்களுக்கு செல்லலாம்.

அதேவேளை சைட்டம் பற்றி பேசுகிறார்கள். என்னை பொறுத்தளவில் ஒரு தனியார் வைத்தியசாலை அல்ல, 10 தனியார் வைத்தியசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.