கோவை ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே திட்டங்களின் தொடக்க விழா நடந்தது. மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த தொகை அதிகமாகும். சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டங்களை நிறைவேற்றும்போது தமிழ்நாட்டுக்கு மேலும் கூடுதல் பலன் கிடைக்கும். சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரெயில்களை இயக்கும் திட்டம் நிறைவுபெறும்போது, தென்இந்தியாவுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும்.

நாடு முழுவதும் 3 ஆயிரம் ரெயில்நிலையங்களில் வை-பை வசதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 140 ரெயில் நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் பயனடைந்து வருகிறார்கள்.
கோவை-பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் இரவு நேர ரெயில் செப்டம்பர் மாதம் இயக்கப்படும். இந்த ரெயிலுக்கு தேவையான பெட்டிகள் தயார் செய்யும் பணியில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கோவை-பெங்களூரு புதிய ரெயில் இயக்குவதில் தாமதம் ஆனது. பொள்ளாச்சி-போத்தனூர் இடையே பயணிகள் ரெயில் விரைவில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு கூறும்போது, ‘ரெயில்வே துறை விவசாயிகளின் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த தானியங்களை உரியநேரத்தில் ரெயில்மூலம் அனுப்பி வைக்க ‘கன்டெய்னர் கார்ப்பரேஷன் இந்தியா’ அமைப்புடன் இணைந்து சேவை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் ரெயில்வேயில் மேலும் உள்கட்டமைப்புகளை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர் கோவை ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டுகளை பொத்தானை அழுத்தி இயக்கி வைத்தார். பின்னர் துடியலூர் ரெயில் நிலையம், விரிவுபடுத்தப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ரெயில்நிலையம், திருப்பூரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் அறை கட்டிடம் ஆகியவற்றை ரெயில்வே மந்திரி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை ரெயில்நிலைய முன்புறத்தை நவீனப்படுத்துவது, ‘மல்டிலெவல்’ கார் பார்க்கிங் அமைப்பது ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். ரூ.7 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் நாகராஜன், ஏ.கே.செல்வராஜ் மற்றும் பலர் பேசினர். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி., பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







