வெ.இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரகானேவும், ஷிகர் தவானும் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆட்டத்தின் 3-வது ஒவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கம்மின்ஸ் ஷிகர் தவானை 2 ரன்னில் அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 9 வது ஓவரில் ஹோல்டர் பந்துவீச்சில் 11 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து தத்தளித்தது.

அதன்பின், ரகானேவுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் 27வது ஓவரை வீசிய தேவேந்திர பிஷு யுவராஜ் சிங்கை 39 ரன்னில் வெளியேற்றினார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரஹானே அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். 112 பந்துகளில் நான்கு பவுன்டரி ஒரு சிக்சர் அடித்து 72 ரன்களை குவித்த போது கும்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய தோனி மற்றும் கேதர் ஜாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதி வரை களத்தில் இருந்த தோனி 79 பந்துகளில் 78 ரன்களை குவித்தார், கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்தது.

பின்னர், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக எவின் லீவிஸ், கைல் ஹோப் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய புவனேஷ்குமார் 3 ரன்கள் விட்டு கொடுக்க, அடுத்து பந்துவீச வந்த உமேஷ் யாதவ் 2-வது பந்தில் லீவிஸை போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.

பின்னர், களமிறங்கிய ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்) கைல் ஹோப்புடன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் இந்தியாவின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அவர்களை பிரித்தார்.

அடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ்சும் 2 ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட்இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து இருந்தது.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது. அந்த அணியில் அதிபட்சமாக ஜாசன் முகமது 40, ரோவ்மன் பவெல் 60 ரன்கள் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதனால், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும், இந்திய அணி 5 போட்டி கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.