சாலமன் மிர் அபார சதம்: இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி காலே மைதானத்தில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 316 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மென்டிஸ் 86 ரன்கள் விளாசினார். உபுல் தரங்கா 79 ரன்களும்(நாட் அவுட்), குணதிலகா 60 ரன்களும், மேத்யூஸ் 43 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் மசகட்சா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், மற்றொரு துவக்க வீரரான சாலமன் மிர் அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்து, அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 112 ரன்களில் ஆட்டமிழந்தார். எர்வின் 18 ரன்களும், வில்லியம்ஸ் 65 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின்னர் இணைந்த சிக்கந்தர் ரசா-வாலர் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 48-வது ஓவரின் 4-வது பந்தில் ரசா சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சாலமன் மிர் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை மண்ணில் ஜிம்பாப்வே அணியின் மிகச்சிறந்த சேசிங்காக இப்போட்டி கருதப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.