இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார்

இந்திய குடியரசு தேர்தல் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

இதையெட்டி குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை பாரதீய ஜனதா கட்சி சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்

பிகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கும் என ஏற்கெனவே முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.