பேரவையில் இருந்து திமுக வெளியேற்றம்;  ஸ்டாலின் கைது

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரியதால் ஏற்பட்ட அமளியையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கேள்வி நேரம் துவங்கியது. அப்போது கூவாத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென்று மு.க. ஸ்டாலின் கோரினார்.
ஆனால் இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை அவையில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இதற்குப் பிறகு பேசிய தி.மு.கவின் சட்டசபை துணைத் தலைவர் கூவாத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டது குறித்துதான் வழக்கு இருக்கிறது; பணம் கொடுக்கப்பட்டது குறித்து வழக்கு இல்லை. ஆகவே அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்கலாம் என்று கூறினார். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதுதொடர்பான அமளி சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இதற்குப் பிறகு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதால் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.