அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும், மக்களுக்கு 90 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த தடை அமலுக்கு வருவதற்கு முன்னரே அமெரிக்க உச்சநீதிமன்றம் ட்ரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மேல்முறையீட்டு மனுவையும் நிராகரித்த நீதிபதிகள், டிரம்ப் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் 9-வது சுற்று நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அமெரிக்க குடியேற்றக் கொள்கைக்கு எதிராக டிரம்ப் அரசு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
எந்த மதத்தினருக்கும் தடை விதிக்கும்படி, அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. எனவே அதனை அரசுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது. எனவே டிரம்ப் விதித்த தடை உத்தரவுக்கு தடை தொடரும் என்றும் உத்தரவிட்டுள்ளது.