வாழைப்பழங்களில் மிக அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்துகள், மாவுசத்துகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழங்கள் மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. வாழைப்பழங்களில் பொட்டாசியம் என்னும் தாது சுமார் 450 மில்லி கிராம் வரை நிறைந்துள்ளன.
இயற்கையாகவே வாழைப்பழங்களில் மிக எளிதில் செரிக்கக்கூடிய சர்க்கரை சத்துகளான குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே நாம் வாழைப்பழத்தை உண்ணுவதன் மூலம் நம் உடல் புத்துணர்ச்சி பெற தேவையான கலோரி சத்தினை உடனடியாக பெறலாம். மேலும் வாழைப்பழங்களில் நமது உடலுக்கு தேவையான மிக இன்றியமையாத வைட்டமின்களான ஏ, பி 5, பி 6, சி மற்றும் டி குறிப்பிடத்தக்க அளவில் நிறைந்துள்ளன.
சமீபத்திய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி தினந்தோறும் நம் உணவில் 2 வாழைப்பழங்களை உண்ணுவதன் மூலம் சுமார் 10 சதவீதம் வரை உயர் ரத்தஅழுத்தத்தை குறைக்கலாம். வாழைப்பழங்களில் காணப்படும் லியூகோசியானிடின் என்னும் வேதிப்பொருள் நமது உணவுக்குழாய், குடல்கள் மற்றும் வயிற்றின் பாதுகாப்பு ஜவ்வுகளான முக்கோஸ்-ன் தடிமனை அதிகரிக்க செய்து நமது உணவுகுழாய், குடல்கள் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களில் இருந்து பாதுகாக்கின்றன.

பொதுவாக வாழைப்பழங்கள் மிகச்சிறந்த அமில எதிர்பான்களாக செயல்பட்டு நமது உடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையை நடுநிலையாக்கி அதனால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை தடுக்கின்றன. நன்கு பழுத்த வாழைப்பழங்கள் மிகச்சிறந்த திட உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி நோயை ஏற்படுத்துவதில்லை.
எனவேதான் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நன்கு பழுத்த வாழைப்பழத்தினை நன்கு மசித்து மிக எளிய மற்றும் சத்து மிகுந்த உணவாக பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக நாம் தினந்தோறும் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளன. வாழைப்பழத்தில் காணப்படும் நார்சத்துக்கள் கொழுப்பு அளவினை சீராக வைக்க உதவுகின்றன.
சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு வாழைப்பழங்களில் காணப்படும் பொட்டாசியம் என்னும் தாது மிக முக்கிய பங்குவகிக்கிறது. தினந்தோறும் 4 அல்லது 6 முறை வாழைப்பழங்களை நமது அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கான காரணிகளிடம் இருந்து 40 சதவீதம் வரை சிறுநீரகத்தை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச்செய்து நமது உடலில் ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
வாழைக்காய் ஊறுகாய், உலர் வாழைத்துண்டுகள், வாழைப்பழ மிட்டாய், வாழைப்பழ பார், வாழைப்பழ அத்தி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரிக்கலாம்.







