துபாயில் போலீஸ்காரர் ஆக பணிபுரியும் ‘ரோபோ’

‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பரவிவருகிறது. முன்பு மருத்துவம், மற்றும் ஓட்டல் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

தற்போது போலீஸ் வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையில் துபாயில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்த ரோபோ துபாய் போலீஸ் சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று கம்பீரமாக சல்யூட் அடிக்கிறது.

தெருக்களில் போலீசார் போன்று ரோந்து பணியும் செல்கிறது. தற்போது சோதனை முறையில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் திருப்தி அடைந்தால் போலீஸ் பணியில் 25 சதவீதம் ரோபோக்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த ரோபோக்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எதுவும் இன்றி வருகிற 2030-ம் ஆண்டில் பயன்படுத்தப்படும் என போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் காலித் நாசர் அல் ரஷூகி தெரிவித்தார்.

இத்தகைய ரோபோக்கள் நாள் முழுவதும் பணிபுரியும். அது விடுமுறை எடுக்காது. உடல் நலக் குறைவு காரணமாகவோ, பிரசவ கால விடுமுறையோ கேட்காது. 24 மணி நேரமும் வேலை பார்க்கும், என்று அவர் கூறினார்.