மக்களுக்கு நல்லது செய்ய முதல்வர் பதவி தேவையில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பாக ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் அரசியல் பேசிவிட்டு வந்தவர் தமிழருவி மணியன். ரஜினியைச் சந்தித்து வந்த பிறகு, அளித்த பேட்டியில் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அதை அவரே அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.
நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில், “ரஜினிக்கு தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது. அவர் முன் வைக்கும் அரசியல் புதுவிதமானது.
அவர் என்னிடம் இப்படிக் கூறினார்: ஒரு முதலமைச்சராகத்தான் நான் வந்து உக்கார வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஒரு சாமானிய மனிதனாக தமிழ்நாட்டுக்குள்ளே வந்தவன் நான், சாலை ஓரத்தில் படுத்து உறங்கியவன்.
எனக்கு இவ்வளவு பெரிய பேரும் புகழும், செல்வமும் செல்வாக்கும் எல்லாவற்றையும் தமிழர்கள் கொடுத்து விட்டார்கள். புதிதாக இந்த மந்திரி பதவியை வைத்துக் கொண்டு நான் அடையப் போவது ஒன்றும் இல்லை.
ஆனால் எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்த இந்த தமிழர்களுக்கு இந்த அரசியல் அமைப்பை சுத்தப்படுத்துகிற பணியையையாவது செய்து விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறேன், என்று சொன்னார். அவர் புதியதொரு அரசியலை முன் வைக்கிறார். தமிழக மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே அவரது அரசியல்,” என்றார்.