54 பந்தில் 80 ரன்கள் குவிக்க டோனியின் ‘டிப்ஸ்’தான் காரணம்: பாண்டியா சொல்கிறார்

ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி 50 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் நடப்பு சாம்பியனாக இந்தியா இருக்கிறது. இந்த தொடரிலும் இந்தியா கோப்பையை வெல்லும் நோக்கில் உள்ளது.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சு, பீல்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ‘கடைநிலை மிடில் ஆர்டர்’ வரிசைதான் கவலையளிக்கும் வகையில் தோன்றியது. அந்த இடத்தில் கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். அவர்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என்று விராட் கோலி கூறி வந்தார்.

இந்நிலையில் இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் களம் விளையாடியது. முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 200 ரன்னுக்குள் இந்திய பந்து வீச்சாளர்கள் சுருட்டி தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். நேற்று வங்காள தேசத்திற்கு எதிரான் போட்டியில் 6-வது இடத்தில் களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை அவுட்டாகாமல் நிலைத்து நின்று விளையாடி 54 பந்தில் 80 ரன்கள் குவித்து அசத்தினார்.

டோனி அளித்த ஆலோசனையால்தான் நான் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடினேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியாக கூறுகையில் ‘‘நான் டோனியிடம் போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதிலை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.

டோனி என்னிடம், முதலில் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது, அணிக்கு எவ்வளவு ரன்கள் வேண்டும் என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதன்பிறகு சூழ்நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு அதற்கேற்றபடி விளையாட வேண்டும் என்றார்.

அவர் சொன்னதில் இருந்து ‘‘நீங்களே உங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்’’ என்பதை நான் புரிந்து கொண்டேன். அதாவது, அணி வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். அதுதான் குறிக்கோள். உங்களுக்காக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் இல்லை. அதனால் நெருக்கடி உங்கள் மீது ஏற்படாது.

அணி வெற்றி பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமோ, சூழ்நிலையை பொறுத்து அதற்கேற்றபடி விளையாட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே போதுமானது என்பதை புரிந்து கொண்டேன். ஆகவே, டோனியின் இந்த மிகப்பெரிய டிப்ஸ், எனக்கு உதவியாக இருந்தது’’ என்றார்.