தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டார். அவருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டது. இதற்காக அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், டிசம்பர் மாதம் 1-ந்தேதி அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து அதே மாதம் 7-ந்தேதி கருணாநிதி வீடு திரும்பினார். வீட்டிலேயே ஒரு வாரம் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு 15-ந்தேதி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மீண்டும் காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரலில் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் எளிதாக சிரமம் இன்றி சுவாசிக்கும் வகையில் தொண்டையில் சுவாசக்குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது. டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நலம் வேகமாக தேறியது. இந்தநிலையில் பூரண குணமடைந்து டிசம்பர் மாதம் 23-ந்தேதி காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து கருணாநிதி வீடு திரும்பினார்.
அதன்பின்னர், கடந்த 5 மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் குழாயும் அகற்றப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் குழாய் அகற்றப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் பேச பயிற்சி அளித்தனர். அவரும் பேசினார்.
இதுகுறித்து, தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் நேற்று தனது இணையதள முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
“தொண்டைக்குழி” வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால் தலைவரால் (கருணாநிதி) பேச இயலவில்லை. கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேச சொன்னார்கள்.

தலைவரிடம் உங்கள் பெயர் என்ன எனக்கேட்க?, “என் பெயர் கருணாநிதி” என்றார். அடுத்ததாக உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க?, “அறிஞர் அண்ணா” என்றார். பின்னர் என்னை யார் எனக்கேட்க?, “துரை” என்றதும், என் கண்கள் கசிந்தன. மீண்டு வருவார் தலைவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவும், சட்டசபை வைர விழாவும் ஜூன் 3-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விழாவில் அவரும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.







